நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அடுத்த பாகம் ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற பெயரில் உருவாகிறது. இதை சுந்தர்.சி இயக்குகிறார். நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார்.
துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. அதை முடித்துவிட்டு பொள்ளாச்சியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் காஸ்ட்யூம் தொடர்பான பிரச்சினையில் உதவி இயக்குநர் ஒருவரை, நடிகை நயன்தாரா மோசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த இயக்குநர் சுந்தர். சி, படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்தார் என்கிறார்கள். நயன்தாராவை மாற்றிவிட்டு தமன்னாவை நடிக்க வைக்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்ததாகத் தெரிகிறது.
ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நயன்தாராவிடம் பேசி பிரச்சினையை முடித்ததாகக் கூறுகின்றனர். இதற்கிடையே பொள்ளாச்சி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை ஆலப்பாக்கம் பொன்னியம்மன் கோயிலில் நேற்று முன் தினம் படப்பிடிப்பைத் தொடர்ந்தனர். நேற்று, நஸ்ரத் பேட்டையில் இதன் படப்பிடிப்பு நடந்தது.