‘குட் பேட் அக்லி’ வசூல் குறைவின்றி இருப்பதால், அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனை படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. முதல் நாளில் ரசிகர்கள் கொண்டாடினாலும், பலரும் இது ரசிகர்களுக்கான படம் என கருத்து தெரிவித்தார்கள். ஆனால், கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் 2-ம் நாள், 3-ம் நாள், 4-ம் நாள் என தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வருகிறது. நாளை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதால், நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தற்போதே பல இடங்களில் ‘விடாமுயற்சி’ படத்தின் வசூலை இப்போதே முறியடித்திருக்கிறது. Book My Show தளத்தில் ‘விடாமுயற்சி’ படத்துக்கு புக் செய்யப்பட்ட டிக்கெட்களை இப்போதே முறியடித்திருக்கிறது. மேலும், அமெரிக்காவில் இன்றைய வசூலைக் கணக்கிட்டால் 1 மில்லியன் வசூலைத் தொட இருக்கிறது. இப்படி பல இடங்களில் சாதனையை படைத்து வருகிறது. இதனை கணக்கில் கொண்டே அஜித்தின் முந்தைய படங்களின் வசூலை முறியடித்து முதல் இடத்தை பிடிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழக உரிமையை ராகுல் கைப்பற்றி வெளியிட்டுள்ளார்.