நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது.
நடிகராகவும் இயக்குநராகவும் சசிகுமார் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக நிலைத்து விட்டது. இதன்பிறகு 2010-ஆம் ஆண்டு ‘ஈசன்’ என்ற படத்தை சசிகுமார் இயக்கினார். அதன்பிறகு அவர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டதால் எந்த படமும் இயக்கவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் பலரும் அவரிடம் படம் எப்போது இயக்குவீர்கள் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசிய சசிகுமார், விரைவில் பீரியட் கதை ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டது என்றும், 2026 ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒரு பீரியட் கதையை விஜய், சூர்யா இருவரிடமும் கூறியதாகவும், ஆனால் அது கைக்கூடவில்லை என்றும் தெரிவித்துள்ள சசிகுமார், இந்தப் படத்துக்குப் பிறகு அந்த கதையையும் சரியான ஹீரோ அமையும்போது திரைப்படமாக நிச்சயம் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மே 1-ல் இப்படம் வெளியாகிறது.