துரை செந்தில்குமார் அடுத்து இயக்கவுள்ள படத்தில் சசிகுமார், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
’கருடன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ’லெஜண்ட்’ சரவணன் நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே தனது அடுத்த படத்தினை முடிவு செய்திருக்கிறார் துரை செந்தில்குமார்.
’கருடன்’ போலவே தனது அடுத்த படத்திலும் இரண்டு பிரதான நாயகர்களை நடிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறார். இதற்காக விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் இருவரிடமும் பேசியிருக்கிறார். இருவருமே சம்மதம் தெரிவிக்கவே, இதற்கான பணிகளை ஒருபுறம் தொடங்கி இருக்கிறார். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே முடிவாகவில்லை.
’எதிர்நீச்சல்’, ’காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இயக்குநர் வெற்றிமாறனிடம் நீண்ட காலமாக உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.