வெங்கி அட்லுரி இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க புதிய படமொன்று உருவாக இருக்கிறது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து தயாரித்திருந்தார்கள். 2023-ம் ஆண்டு இப்படம் வெளியானது. தற்போது மீண்டும் தனுஷ் – வெங்கி அட்லுரி கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.
இப்படத்தினை நாக வம்சியே தயாரிக்க முன்வந்துள்ளார். இதற்கு ‘ஆனஸ்ட்ராஜ்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆனஸ்ட்ராஜ்’. இந்த தலைப்புக்கு சத்ய ஜோதி நிறுவனத்திடம் இருந்து அனுமதி வாங்கினார்களா என்பது விரைவில் தெரியவரும்.
முன்னதாக, ‘வாத்தி’ படத்துக்கு பிறகு துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ என்னும் படத்தினை இயக்கி இருந்தார் வெங்கி அட்லுரி. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை புரிந்தது. இதற்கு பிறகு பல்வேறு முன்னணி நடிகர்கள் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்க தயாராக இருந்தார்கள். ஆனால், அவர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.