மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. எப்போதுமே அஜித்துக்கு ஓர் இயக்குநரை பிடித்துவிட்டால், அவரோடு தொடர்ச்சியாக படங்கள் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு ஆதிக் ரவிச்சந்திரனுடன் பணிபுரிந்த விதம் மிகவும் பிடித்துள்ளது. இதனால், அவரோடு இன்னொரு படம் பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக கதை விவாதப் பணிகளை, ‘குட் பேட் அக்லி’ பட வெளியீட்டுக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் தொடங்கவுள்ளார். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே முடிவாகவில்லை.
முன்னதாக அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி இணைந்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பணிபுரிந்துள்ளது. அப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகராக அறிமுகமானார். அந்த நட்பை முன்வைத்தே ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
இதன் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போதே திரையரங்க ஒப்பந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்துக்கு 9-ம் தேதி இரவே ப்ரீமியர் காட்சிகளை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ராகுல்.