‘ஆலம்பனா’ படத்தின் வெளியீட்டு தேதியினை மீண்டும் அறிவித்திருக்கிறது படக்குழு.
பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸுக்கு திட்டமிடப்பட்ட படம் ‘ஆலம்பனா’. கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு இருந்த பிரச்சினைகளால் இப்படம் வெளியிட முடியாமல் போனது. தற்போது மீண்டும் இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு.
இம்முறை கண்டிப்பாக வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஏனென்றால் பிரச்சினைக்குரிய படங்கள் அனைத்துக்கும் பேசி தீர்வு காணப்பட்டு வருவதால் இந்த நம்பிக்கை படக்குழுவுக்கு கிடைத்திருக்கிறது.
பாரி கே.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆலம்பனா’ படத்தில் வைபவ், பார்வதி நாயர், முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த் ராஜ், பாண்டியராஜ், லியோனி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை கே.ஜே.ஆர் நிறுவனத்துடன் கொஸ்துப் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதன் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி பணிபுரிந்திருக்கிறார்.
குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் பூதம் பின்னணியில் இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பூதமாக முனிஷ்காந்த் நடித்துள்ளார். 2021-ம் ஆண்டு வெளியாக வேண்டிய இப்படம் பல்வேறு பிரச்சினைகளால் தள்ளிப் போய்கொண்டே இருந்தது. இப்போது மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.