சென்னை: மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
நீண்ட வருடங்கள் கழித்து தமிழில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் அளித்த பேட்டியில் மீண்டும் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். அஜித்தை இயக்குவது குறித்த கேள்விக்கு, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறேன். பின்பு 2,3 முறை மீண்டும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசினோம். ஆனால், அவை அனைத்துமே நடக்கவில்லை. அதனை தொடர்ந்து ஒருமுறை அஜித் தரப்பில் அழைத்தபோது, இந்தியில் சல்மான்கானை இயக்கும் வாய்ப்பு இருந்தது.
அதுவும் முடியாமல் போய்விட்டது. ‘பில்லா 3’ இயக்கக் கூட அழைத்தார்கள். வேண்டாம் என விலகிவிட்டேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘பில்லா’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். அதில் தான் அஜித்தை மிகவும் ஸ்டைலாக காட்டியிருப்பார் விஷ்ணுவர்தன். அதனாலேயே அஜித் ரசிகர்கள் மத்தியில் விஷ்ணுவர்தனுக்கு தனி இடம் உண்டு.