ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது.
இதையடுத்து 8-ம் பாகம் வரும் மே-23 வெளியாகிறது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – முந்தைய பாகத்தின் தொடர்ச்சியே இந்த படம். உலக நாடுகளின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்படும் ‘என்டிடி’ எனப்படும் ஏஐ, உலகையே அச்சுறுத்தும் வில்லனாக மாறுகிறது. அதன் ஒரு சாவி டாம் க்ரூஸிடம் இருக்கும் நிலையில், மற்றொரு சாவி ஆழ்கடலில் கிடக்கிறது. இதனை டாம் க்ரூஸ் மீட்க செல்வதுடன் போன பாகம் முடிந்தது.
டாம் க்ரூஸின் முந்தைய மிஷன்கள் அனைத்துமே இதை நோக்கித்தான் என்ற வசனம் ட்ரெய்லரில் வருகிறது. அதே போல ட்ரெய்லரின் இறுதியில் கடைசி முறையாக என்னை நீங்கள் நம்ப வேண்டும் என்று டாம் க்ரூஸ் சொல்கிறார். இதுதான் ‘மிஷன் இம்பாசிபிள்’ கடைசி பாகம் என்பதற்காக வசனங்களாகவே அவற்றை பார்க்க முடிகிறது. முந்தைய படங்களைப் போலவே வித்தியாச வித்தியாசமாக யோசித்து ஸ்டன்ட் காட்சிகளில் ஈடுபடும் டாம் க்ரூஸ் இதில் விமானத்தில் தொங்கியபடி பறந்து செல்கிறார். ஆக்ஷன் ரசிகர்களுக்கு மெய்சிலிர்ப்புக்கு உத்தரவாதம். ‘மிஷன் இம்பாசிபிள் 8’ ட்ரெய்லர் வீடியோ: