மிதுனம் நுண்ணறிவும், பேச்சு சாதுர்யமும் எடுத்த வேலையை முடிக்கும் வல்லமையும் கொண்ட நீங்கள், பழி பாவத்துக்கு அஞ்சி நேர்பாதையில் செல்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்சினைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நல்லதே நடக்கும்.
தடைபட்டுக் கொண்டிருந்த வேலைகள் முடிவுக்கு வரும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். அரைகுறையாக நின்று போன வீட்டை முழுமையாக கட்டி முடிக்க வங்கியில் கடன் கிடைக்கும். வெகுநாட்களாக பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். குழந்தை பாக்கியம் உண்டாகும். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். தாய்வழியில் சொத்துப் பிரச்சினை தலை தூக்கும். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவியுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் அடிக்கடி தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். சுப விரயங்கள் வரக்கூடும். ஆன்மிகப் பயணம் சென்று வருவதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20.01.2026 வரை உங்களின் பாதகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திர சாரத்தில் சனி பகவான் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் தம்பதிக்குள் விவாதங்கள் வரும். பொருள் இழப்பு, வழக்குகள் வந்து நீங்கும். 28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை பாக்யாதிபதியான சனிபகவான் தன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பாராத வெற்றி, பண வரவு, அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். 17.05.2026 முதல் 09.10.2026 வரை மற்றும் 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்கள் ராசிக்கும், சுகஸ்தானத்துக்கும் அதிபதியான புதனுக்குரிய கிரகமான ரேவதியில் செல்வதால் வீடு – வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு திருமணம் கூடி வரும்.
இல்லத்தரசிகளே! குடும்பத்தில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அவர்களால் பெருமையடைவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் நிர்வாகத் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயரும், சம்பளம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், உயர் கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை நீங்கி, இனி உங்களுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே முடியும். மாணவ-மாணவிகளே! வகுப்பறையில் நற்பெயர் எடுப்பீர்கள்.
வியாபாரிகளே, முடங்கிக் கிடந்த நீங்கள் ஆர்வம் அடைவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே, ராசிக்கு 10-ம் வீட்டில் சனி வந்து அமர்வதால் மதிப்பு மரியாதை கூடும். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மேலதிகாரி ஆதரவாக இருப்பார். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.
இந்த சனி மாற்றம் குடத்தில் இட்ட விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும்.
பரிகாரம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாயநாதர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை சனிக்கிழமையில் சென்று வணங்குங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |