இந்தி நடிகையான ஊர்வசி ரவுதெலா, தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்கு மகாராஜ்’ படத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன் மும்பையில் நடந்த கொள்ளை முயற்சியின்போது பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையே பிரபலங்களின் பாதுகாப்பு குறித்து நடிகை ஊர்வசி ரவுதெலாவிடம் கேட்டபோது, “இது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது” என்ற அவர், “நான் நடித்துள்ள ‘டாக்கு மகாராஜ்’ படம் ரூ.105 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது. அதற்காக என் அம்மா எனக்கு வைரம் பதித்த இந்த ரோலக்ஸ் வாட்ச் பரிசாகத் தந்தார். என் தந்தையும் இந்த மினி கைகடிகாரத்தைப் பரிசளித்தார். ஆனால் அதை வெளியில் அணிந்து செல்ல நம்பிக்கை வரவில்லை. யார் வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற பாதுகாப்பின்மை எங்களுக்கு இருக்கிறது என்றார்.
சைஃப் அலி கான் தாக்கப்பட்டது குறித்துக் கேட்ட கேள்வியின் போது, தனது படத்தின் வசூல் பற்றியும் வைர ரோலக்ஸ் பற்றியும் அவர் பேசியது சமூக வலைதளத்தில் சர்ச்சையானது. இதற்காக அவர் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் ஊர்வசி ரவுதெலா மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சைஃப் அலி கான் சார், நீங்கள் இருந்த சூழலின் தீவிரத்தை முழுமையாக அறியாமல் அறியாமையுடனும், உணர்ச்சியற்ற தன்மையுடனும் பேசியதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் தைரியத்துக்கும் விடாமுயற்சிக்கும் தலைவணங்குகிறேன். உங்களுக்கு என் ஆதரவை வழங்குகிறேன். என் நடத்தைக்காக மீண்டும் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.