பொதுவாக நீண்ட தாமதத்துக்குப் பின் வெளியாகும் படங்கள் பெரிய வெற்றியை பெறுவதில்லை என்பது பரவலான கருத்து. அதற்கேற்ப தமிழிலேயே பல்வேறு உதாரணங்களை கூற முடியும். 2012ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கிறது.
இந்த காலகட்டத்தில் மூன்று நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்துவிட்டன. தமிழ்நாட்டில் நான்கு முதலமைச்சர்கள் மாறிவிட்டனர். பணமதிப்பிழப்பு, கரோனா என பெரிய ‘சம்பவங்கள்’ அரங்கேறி விட்டன. அன்று மாணவர்களாக இருந்தவர்கள் எல்லாம் இன்று குடும்பஸ்தர்கள். இத்தகைய மாற்றங்களை எல்லாம் கடந்து 2025-ன் தொடக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது?
தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதற்காக உயிரை கூட கொடுக்க தயாராக இருக்கும் எம்ஜிஆர் (எ) ராஜா (எ) மதகஜராஜா (விஷால்). கேபிள் டிவி நடத்தும் அவர் தன்னுடைய பால்யகால நண்பர்களை (சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா) ஒரு திருமணத்தில் சந்திக்கிறார். அந்த திருமணத்தில் இருக்கும் சிக்கல்களை தீர்க்கும் அவர், தனது நண்பர்களில் ஒருவருக்கு ஒரு டிவி சேனல் அதிபரால் (சோனு சூட்) பெரிய பிரச்சினை ஏற்பட்டதை தெரிந்து கொண்டு அவரிடம் நியாயம் கேட்க செல்கிறார். இதில் ஹீரோவுக்கும் அரசியல் பலம் படைத்த அந்த தொழிலதிபருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வென்றார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.
பொதுவாக சுந்தர்.சி படங்களில் லாஜிக் எல்லாம் இருக்காது. முடிந்தவரை பார்ப்பவர்களை எரிச்சல் அடைய செய்யாத லாஜிக் மீறல்களுடன் ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி மினிமம் கியாரண்டி படங்களை கொடுப்பதே அவரது பாணி. சமீபத்தில் வெளியான அவரது ‘அரண்மனை 4’ படத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மிக சுமாரான ஒரு பேய்ப் படத்தையே அவரது வழக்கமான டெம்ப்ளேட்டுடன் கொடுத்து கல்லா கட்டிவிட்டார்.
அதே போல ‘மதகஜராஜா’விலும் சுந்தர்.சி தனது வழக்கமான டெம்ப்ளேட்களை கொண்டே ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை கொடுத்து ஜெயித்திருக்கிறார் என்று தாராளமாக சொல்லலாம். முதலில் இந்த படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிருக்க வேண்டிய ஒன்று என்பதை மனதில் வைத்துக் கொண்டு பார்ப்பது அவசியம். அந்த காலகட்டத்தில் வெளியான படங்களில் இடம்பெற்றிருந்த சிறுபிள்ளைத்தனமான காமெடி, இரண்டு ஹீரோயின்கள், அவர்களுக்கு தனித்தனியே இரண்டு ’கவர்ச்சி’ பாடல்கள், அவர்களை வைத்து இரட்டை அர்த்த வசனங்கள் அனைத்தும் இதிலும் உள்ளன. ஆனால் எதை கொடுத்தால் ஆடியன்ஸ் மத்தியில் எடுபடும் என்ற ‘பல்ஸை’ அறிந்து அதை ஓவர்டோஸ் ஆகிவிடாமல் சரியான விகிதத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் இடைவேளையில் தான் பிரதான கதையே தொடங்குகிறது. அதற்கு முன்பு முதல் பாதி முழுவதும் ஹீரோவும் அவரது நண்பர்களும் செய்யும் சேட்டைகள், ஹீரோவுக்கும் ஹீரோயின்களுக்கும் இடையிலான காட்சிகள் என செல்கிறது படம். எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கலகலப்பான காட்சிகளுடன் செல்லும் படத்துக்கு சந்தானத்தின் ‘வின்டேஜ்’ நையாண்டிகள், ஒன்லைன் கவுன்டர்கள் பெரிய பலம். பழைய சந்தானத்தை ஆடியன்ஸ் எவ்வளவு மிஸ் செய்கிறார்கள் என்பதை ஒவ்வொரு அவர் பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் எழும் ஆர்ப்பரிப்புகளே சாட்சி. குறிப்பாக முதல் பாதி முழுவதும் சந்தானத்துக்கும் அவரது மாமியாராக வரும் கே.எஸ்.ஜெயலட்சுமிக்கும் இடையிலான காட்சிகள் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கின்றன.
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் ஹீரோ வில்லன் மோதல் என்று படம் சற்றே சீரியஸ் மோடுக்கு மாறினாலும், மீண்டும் சந்தானம் வந்த பிறகு அதே ‘கலகல’ பாணிக்கு திரும்பி விடுகிறது. விஷால் ஆட்டோ டிரைவராக வரும் மணிவண்ணன் உடன் சேர்ந்து வில்லனை மாட்டிவிடும் காட்சி நல்ல ஐடியா. அஞ்சலியின் வீட்டுக்கு விஷால், சந்தானம் அண்ட் கோ குடிவரும் காட்சிகள் காமெடிக்காக வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் இடம்பெற்றிருந்த இரட்டை அர்த்த வசனங்களும், கவர்ச்சி என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் நெளியச் செய்கின்றன. இவற்றை மட்டும் சில இடங்களில் கத்தரித்திருக்கலாம்.
மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு, சீனு மோகன் என மறைந்த நடிகர்கள் பலரையும் பெரிய திரையில் மீண்டும் பார்ப்பது நெகிழ்வை தந்தது. குறிப்பாக மணிவண்ணன், மனோபாலா இருவரும் வரும் காட்சிகள் சிறப்பு. அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்னால் மனோபாலாவின் பிணத்தை வைத்துக் கொண்டு விஷாலும், சந்தானமும் செய்யும் அலப்பறைகள் அதிரடி சரவெடி ரகம். அந்த நீண்ட காட்சி முழுவதுமே அரங்கில் ஓயாத சிரிப்பலை. படத்தின் வெற்றிக்கு இந்த காட்சியே முக்கிய பங்காக இருக்கும். பிணமாக மனோபாலா வரும் காட்சிகளும், அதில் சந்தானம் அடிக்கும் கவுன்டர்களும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும்.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பாடல்களில் ‘சிக்கு புக்கு ரயிலு வண்டி’ பாடல் ரசிக்க வைக்கிறது. விஷால் குரலில் ஏற்கெனவே ஹிட் ஆன ‘மை டியர் லவ்வரு’ பாடல் வரும் இடத்தில் அரங்கல் அதிர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஒலி/ஒளி தரத்தை மேம்படுத்திய படக்குழுவை மனதார பாராட்டலாம். எந்த இடத்திலும் அவை கண்ணையும், காதையும் பதம் பார்க்கவில்லை.
மொத்தத்தில் சுந்தர்.சி படங்களில் வரும் வழக்கமான அபத்தங்கள் இதிலும் உண்டு என்றாலும் அவை எந்த இடத்திலும் ஓவர்டோஸ் ஆகாமல் விறுவிறுப்பான திரைக்கதையில் மறைந்து போய் விடுகின்றன. முன்பே குறிப்பிட்டது போல இது 12 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான படம் என்பதை மட்டும் மனதில் கொண்டு வேறு எந்த முன்முடிவுகளும் இல்லாமல் சென்று பார்த்தால் ஒரு ரகளையான ‘காமெடி சரவெடி’யை உத்தரவாதம் தருவார் இந்த ‘மதகஜராஜா’