சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’, 12 ஆண்டுக்குப் பிறகு வெளியாகி வெற்றி பெற்றிருப்பது தமிழ்த் திரையுலகுக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றிக்கு காமெடியே முக்கிய காரணம். விஷால், சந்தானம், மறைந்த மனோபாலா ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
“பொங்கலுக்கு குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற படமாக ‘மதகஜராஜா’ இருந்தது. வன்முறையோ, ஆபாசமோ இல்லாமல் இருந்ததால் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. சமீப காலமாக வந்த பெரிய ஹீரோ படங்களில் வன்முறை, ரத்தம் அதிகமாக இருந்தது. அதில் இருந்து மாறுபட்டு, பார்வையாளர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்ததால் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்கிறார்கள் திரையுலகினர்.
இதை அடுத்து பல்வேறு பிரச்சினைகளால் வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் எதிர்பார்ப்புள்ள சில படங்களை வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’, சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்’, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘நரகாசூரன்’, அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ என சில படங்களை உடனடியாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து பிரபல தியேட்டர் அதிபரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது, “மதகஜராஜாவின் வெற்றி சினிமாவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறது. இதையடுத்து வெளிவராமல் இருக்கும் சில படங்களை ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அதுபற்றி அறிவிப்போம்” என்றார்.