கிராமம் ஒன்றில் கேபிள் நெட்வொர்க் நடத்தும் மதகஜராஜா (விஷால்), தனது பள்ளி ஆசிரியர் மகள் திருமணத்துக்காக அவர் ஊருக்குச் செல்கிறார். அங்கு தனது நண்பர்களான கல்யாணசுந்தரம் (சந்தானம்), ரமேஷ் (சடகோபன் ரமேஷ்), சண்முகம் (நிதின் சத்யா) ஆகியோரை சந்திக்கிறார். அப்போதுதான் தனது நண்பர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது. அந்த பிரச்சினைகளைச் சகல வல்லமை கொண்ட மதகஜராஜா எப்படித் தீர்த்து வைக்கிறார் என்பதை எக்கச்சக்க காமெடி, ஆக்ஷனோடு சொல்கிறது கதை.
12 வருடத்துக்குப் பிறகு வெளியாகி இருக்கும் படம் என்றாலும் பெரிய பாதகம் ஏதுமில்லை. காரணம், சுந்தர்.சி படங்களில் இருக்கும் பரபரக்க வைக்கிற நகைச்சுவையும் ஆக்ரோஷ ஆக்ஷனும் சந்தானத்தின் டைமிங் பன்ஞ்சும் எக்காலத்துக்கும் ஏற்ற படமாக மாற்றியிருக்கிறது இதை.
கதையும் காட்சிகளும் சில படங்களின் சாயலைத் தந்தாலும் அதை முழுவதும் மறக்கடிக்க வைத்து விடுகிறது, நகைச்சுவை. இருந்தாலும் பெண் வெறுப்பு விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம்.
இரண்டாம் பாதியில் வரும் விஷால், சந்தானம் மற்றும் மனோபாலாவின் அந்த நீண்ட காமெடி சீக்குவென்ஸில், ‘இப்படி சிரிச்சு எவ்வளவு நாளாச்சு?’ என்பது போல மொத்த திரையரங்கும் விழுந்து சிரிக்கிறது. ஆனால், பெரும் சக்தி வாய்ந்த வில்லனாக வரும் கற்குவேல் விஸ்வநாத்துக்கும் (சோனு சூட்), விஷாலுக்குமான மோதல் ஆட்டங்கள் சுவாரஸ்யமோ, அழுத்தமோ இல்லாததால், ‘அடுத்த காமெடி எப்ப சார் வரும்?’ என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார், படத்தின் கதாநாயகன் விஷால். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளில் ‘எய்ட் பேக்’கில் வந்து மோதுவது நம்பும்படியாகவே இருக்கிறது. சந்தானம், படத்தின் இரண்டாவது ஹீரோ. தனது டைமிங் நகைச்சுவையால் படத்தை ஜாலியாக இழுத்துச் செல்கிறார். சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் கதையை நகர்த்த உதவுகிறார்கள். அஞ்சலி, வரலட்சுமி என இரண்டு கதாநாயகிகள். சுந்தர்.சி படங்களில் கதாநாயகிகளுக்கு என்ன வேலை இருக்குமோ, அதேதான் இதிலும்! வில்லன் சோனு சூட், ஹீரோவை முறைப்பது, சவால் விடுவது, கிளைமாக்ஸில் அடிவாங்குவது என்கிற சம்பிரதாயத்தைச் சரியாகவே செய்திருக்கிறார்.
தீக்குச்சி திருமுகமாக சாமிநாதன், நகைச்சுவை அடியாளாக மொட்ட ராஜேந்திரன், ஆட்டோ ஓட்டுநராக மறைந்த மணிவண்ணன், அமைச்சராக மனோபாலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் படத்தில்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வேகத்துக்கு உதவுகின்றன. குறிப்பாக ‘மைடியர் லவ்வரு…’ பாடல் சிறப்பு. ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகளில் சுழன்று அடிக்கிறது. வெங்கட் ராகவனின் ‘லைட் வெயிட்’ வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
‘அது எப்படி, இது எப்படி? இதெல்லாம் சாத்தியமா தலைவரே?’ என்ற லாஜிக் விஷயங்களைத் தூக்கி மூட்டை கட்டிவிட்டு வந்தால் சுத்தமான என்டர்டெயின்மென்டுக்கு கெத்தான கேரண்டி தருகிறார் இந்த மதகஜராஜா!