எளிய மக்களுக்கு நெருக்கமான காட்சிகளாலும், வசனங்களாலும் வெகுவாக கவனம் ஈர்க்கிறது மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர்.
சமையல் குறிப்பு பாணி விவரிப்பு மூலம் ட்ரெய்லர் ஈர்க்கத் தொடங்குகிறது. புதிதாகத் திருமணமான ஜோடியாக மணிகண்டனும் சான்வே மேகனாவும் காட்டப்படுகின்றன. எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வரும் ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ மணிகண்டன் எப்படி ஒரு குடும்பஸ்தனாக உருவெடுக்கிறார் என்ற ஒன்லைனை காட்சிகளுடன் விவரிக்கிறது ட்ரெய்லர்.
சாமானிய மக்களின் பணம் சார்ந்த வாழ்வியலின் இடர்பாடுகளை நெஞ்சை உருக்கும் பாணியில் அல்லாது, காட்சிகள் – வசனங்கள் மூலம் காமெடியுடன் சொல்லும் நல்ல ஃபேமிலி டிராமாவாக இருக்கும் என்ற நம்பிக்கையை கூட்டும்படி ட்ரெய்லர் உள்ளது. சாதாரண மனிதர்களையே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முதன்மைக் கதாபாத்திரங்களில், தனது அசாதாரணப் பங்களிப்பால் தனித்துவம் காட்டுவதில் தேர்ந்து வரும் மணிகண்டனுக்கு ‘குடும்பஸ்தன்’ படமும் குறிப்பிடத்தக்க ஸ்கோர் தரும் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.
மணிகண்டன் நடிப்பில் ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள படம் ‘‘குடும்பஸ்தன்’. சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைக்கிறார். சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், கனகம்மா, ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். >>ட்ரெய்லர் வீடியோ