சென்னை: கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திரும்ப அளித்துள்ளார் நெல்சன்.
தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய படங்கள் வெளியாகின. இதில் ‘அமரன்’ படத்தை தவிர இதர படங்கள் இரண்டுமே படு தோல்வியை தழுவின. ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் தமிழக உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி வெளியிட்டார். 11 கோடிக்கு உரிமையைக் கைப்பற்றி விநியோகித்தார். ஃபைவ் ஸ்டார் செந்திலுக்கு நஷ்டம் ஏற்பட்டால், தொகை திரும்ப அளிக்க தேவையில்லை என்ற முறையிலேயே வியாபாரம் நடைபெற்றது.
தமிழகத்தில் ‘ப்ளடி பெக்கர்’ படத்திலிருந்து ஃபைவ் ஸ்டார் செந்திலுக்கு 4 கோடி மட்டுமே திரும்பக் கிடைத்தது. சுமார் 7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. படம் வெளியான சில நாட்களில், நஷ்டத் தொகையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஃபைவ் ஸ்டார் செந்திலிடம் உறுதியளித்திருக்கிறார் நெல்சன்.
தற்போது நெல்சன் – ஃபைவ் ஸ்டார் செந்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதில் நஷ்டம் தொகையில் சுமார் 5 கோடியை திரும்ப அளிப்பதாக உறுதியளித்திருக்கிறார். இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தை இயக்கியவர், அவருடைய பாணியிலேயே நஷ்டத்தை ஈடுகட்டுகிறார் என்கிறார்கள். ‘ப்ளடி பெக்கர்’ படத்தை தயாரித்த வகையில் நெல்சன் சந்தோஷத்திலேயெ இருக்கிறார். ஏனென்றால் இதர உரிமைகள் விற்பனையில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.