சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டீசரை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் தலைப்புடன் கூடிய டீசரை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார்கள்.
தற்போது சல்மான் கான் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரம்ஜானுக்கு வெளியாகவுள்ள அந்தப் படத்தை முடித்துவிட்டுத் தான் சிவகார்த்திகேயன் படத்துக்கு திரும்ப உள்ளார். இதனிடையே சுதா கொங்காரா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஸ்ரீலட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால், ஜெயராம், விக்ராந்த் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.