‘பென்ஸ்’ படத்தின் பணிகள் தாமதத்தால், ‘காஞ்சனா 4’ படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘புல்லட்’ படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார் லாரன்ஸ். பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ள இப்படத்தில் லாரன்ஸ் உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வந்தன. இதுவரை பல முறை படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டு நடைபெறவில்லை.
இதனால் ‘காஞ்சனா 4’ பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டார் லாரன்ஸ். அவரே இயக்கி, நடிக்கவுள்ள இப்படம் பெரும் பொருட்செலவில் தயாராகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மணீஷும் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. இதில் நாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய சூழல்படி பார்த்தால் ‘பென்ஸ்’ படத்துக்கு முன்பாகவே ‘காஞ்சனா 4’ தொடங்கப்படும் எனத் தெரிகிறது. அதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.