“பெண்களை சக மனிதராகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம்தான் மிக ஆபத்தான சமூகம் என்று இயக்குநர் ராஜூமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோ மோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜென்டில்வுமன்’. சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும் படமாக இது உருவாகி இருக்கிறது. இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ராஜுமுருகன், லெனின் பாரதி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள். இந்த விழாவில் ராஜூமுருகன் பேசும்போது, “இயக்குநர் ஜோஷ்வா, யுகபாரதி அண்ணன் மூலமாகத்தான் பழக்கம். அவர் முதலில் இந்தக் கதையைச் சொன்னபோது இந்த படத்தின் பெயரே வேறு. ஆனால் அதைவிட ‘ஜென்டில்வுமன்’ டைட்டில் மிக பொருத்தமாக உள்ளது.
ஜென்டில்மேன் பற்றி மட்டும்பேசும் உலகில், ஜென்டில்வுமன் பற்றியும் பேச வேண்டும் அதை ஜோஷ்வா செய்துள்ளார். சென்சாரில் இருந்து ஒருநாள் போன் செய்தார். இத்தனை கட்… என்ன செய்வது என்றார். சென்சாரால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். அதனால் இதையெல்லாம் செய் என சொல்லித் தந்தேன். இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
இங்கு எல்லாவற்றையும் புனிதப்படுத்துவது தான் மிகப் பெரிய பிரச்சினை, புனிதப்படுத்த நீ யார் ? பலர் நம் காலத்துக்கு முன்பே வழக்கத்தை உடைத்து, என்னென்னவோ செய்துவிட்டார்கள். ஆனால், நாம் அதைத் தாண்டவே இல்லை. இப்படியான உலகில் புனிதப்படுத்துவதைக் கட்டுடைப்பது முக்கியம்.
பெண்களை சக மனிதராகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம்தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன். பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவதுதான் இந்த ஜென்டில்வுமன். இதுபோன்ற படத்தைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வரும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார் ராஜூமுருகன்.