சத்தம் காட்டாமல் இயக்குநர் ராம், ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.
‘பறந்து போ’ என அதற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். Rotterdam film festivalலில் திரையிட அந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் கருத்தியல் ரீதியான படங்களை எடுப்பதில் தேர்ந்தவர் ராம். அவரது முதல் படமான கற்றது தமிழ் முதற்கொண்டு அவரின் படங்கள் ஏதாவது ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதை தீவிரமாகக் கொண்டுச் செல்பவை. ‘ஏழுகடல் ஏழுமலை’ என்ற ஒரு படத்தை எடுத்து அதுவும் வெளிநாட்டின் திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு கவனத்திற்குள்ளாகி இப்போது தமிழகத்தில் திரைக்கு வர காத்திருக்கிறது.

இப்படியான தீவிரமான படங்களை எடுத்தவர் இப்போது மிர்ச்சி சிவாவை ஹீரோவாக போட்டு ‘பறந்து போ’ என்ற படத்தை எடுத்திருப்பது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இசை கலந்த காமெடி படம் என்கிறார்கள். வசதி குறைந்த ஒரு தகப்பனுக்கும் அவருடைய பையனுக்குமான உறவைப் படம் பேசுகிறது. முற்றிலும் அவருடைய இயல்பிலிருந்து மாறுபட்டு இந்த படம் அமைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
மிர்ச்சி சிவா இப்படி நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது என்பதுதான் பேச்சாக இருக்கிறது. இயக்குநர் ராம், நடிக்க அவரை அழைக்கும் போது அவரால் நம்ப முடியாமல் இருந்ததாகவும், மறுபடியும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். ராமின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் இதில் இல்லை. பதிலாக சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

டைரக்டர் ராமின் காமெடியை சந்திக்கவும் அவரது மெலிதான இந்தக் கதையை படமாக்கிய விதத்தை பார்க்கவும் திரை ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு ராம் தொடர்ச்சியாக ‘ஏழு கடல் ஏழுமலை’, ‘பறந்து போ’ என்ற இரண்டு படங்களை எடுத்து முடித்திருக்கிறார். முதலில் நிவின் பாலி, சூரி நடிக்கும் ‘ஏழு கடல் ஏழுமலை’ வெளியாகிறது. அதற்குப் பிறகுதான் மிர்ச்சி சிவா நடித்திருக்கும் ‘பறந்து போ’ வெளியாகிறது.