டிசி காமிக்ஸின் முழுமுதற் சூப்பர் ஹீரோ என்றால் அது ‘சூப்பர் மேன்’ தான் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக பார்க்கப்படும் சூப்பர் மேன் கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் தெரியாதவர்களே இருக்க முடியாது எனலாம். காமிக்ஸ், கார்ட்டூன், பொம்மைகள், திரைப்படம், வெப் தொடர்கள் என சூப்பர் மேன் இதுவரை பல வடிவம் பெற்றுள்ளது.
திரைப்படங்களை பொறுத்தவரை மறைந்த கிறிஸ்டோபர் ரீவ் தொடங்கி கடைசியாக சூப்பர் மேனாக நடித்த ஹென்றி கெவில் வரை படம் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி அவரவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் தற்போது ஜேம்ஸ் கன் இயக்கும் புதிய படத்தின் மூலம் சூப்பர் மேன் பொறுப்பை ஏற்றிருப்பவர் டேவிட் காரன்ஸ்வெட்.
ஆனால், முந்தைய சூப்பர் மேன் நடிகர்களை காட்டிலும் டேவிட் காரன்ஸ்வெட் மீது சமூக வலைதளங்களில் அளவில்லாத வன்மம் கொட்டப்படுகிறது. படத்தின் போஸ்டர் தொடங்கி சமீபத்திய ஸ்னீக் பீக் வரை சின்னச் சின்ன விஷயங்களை கூட தேடிக் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர். இப்படி செய்பவர்கள் யாரென்று பார்த்தால், வழக்கமாக டிசி ரசிகர்களின் எதிரணியாக பார்க்கப்படும் மார்வெல் ரசிகர்கள் அல்ல. டிசி ரசிகர்களேதான் புதிய சூப்பர் மேனை கலாய்த்து தள்ளுகின்றனர்.
இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், முந்தைய ‘ஜஸ்டிஸ் லீக்’, ‘சூப்பர் மேன் V பேட்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ உள்ளிட்ட இயக்கிய ஸாக் ஸ்னைடர் ரசிகர்கள்தான் இப்படி செய்வது. காரணம் ஸ்னைடரின் இடத்துக்கு ஜேம்ஸ் கன் கொண்டுவரப்பட்டதை முதலில் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
கூடுதலாக ஸ்னைடர் உருவாக்கியு டிசிவெர்ஸ்-ஐ முற்றிலுமாக ஜேம்ஸ் கன் இல்லாமல் செய்து புதிய நடிகர்களை, கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய ஒட்டுமொத்த டிசி-யின் கலரையே மாற்றிவிட்டார். இதனால் புதிய சூப்பர் மேன் பற்றிய பதிவுகளில் எல்லாம் கிடைக்கும் கேப்பில் தங்கள் வன்மத்தை கொட்டி வருகின்றனர் ஸ்னைடர் ரசிகர்கள்.
இவர்கள் இப்படி கலாய்க்கும் அளவுக்கு புதிய சூப்பர்மேனில் என்ன பிரச்சினை? அதாவது, டிசி படங்களுக்கு என்று இருக்கும் ஒரு வித டார்க் டோன், இந்தப் படத்தில் முற்றிலும் இல்லாமல் மார்வெல் படம் போல கலர்ஃபுல்லாக சூப்பர்மேனின் உடை, படத்தின் போஸ்டர் தொடங்கி ஸ்னீக் பீக் என அனைத்தும் வண்ணமயமாக உள்ளது.
சொல்லப் போனால், டிசி படைப்புகளில் பேட்மேன் காமிக்ஸ் மட்டுமே அத்தகைய டார்க் தன்மை கொண்டதாக இருந்து வருகிறது. ஆனால், சூப்ப ர்மேனை பொறுத்தவரை காமிக்ஸும் சரி, படங்கள், கார்ட்டூன்களும் சரி கலர்ஃபுல் ஆகவே அமைந்திருக்கும். அதையே ஜேம்ஸ் கன் தனது படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் ஸ்னீக் பீக்கில் கூட காமிக்ஸில் இடம்பெறும் அத்தனை அம்சங்களை கிட்டத்தட்ட மாற்றாமல் இடம்பெற செய்திருக்கிறார்.
அதேபோல முந்தைய சூப்பர் மேன்களை போலல்லாமல் டேவிட் காரன்ஸ்வெட் குழந்தை முகம் கொண்டவராக இருப்பதும் கலாய்ப்புக்கு மற்றொரு காரணம். எனினும், படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு ட்ரோல்கள் அவசியமா என்று தெரியவில்லை. இத்தனைக்கும் படத்தின் அறிவிப்பு டீசரில் பழைய 1978 சூப்பர் மேனில் ஜான் வில்லிம்ஸின் அட்டகாசமான தீம் இசையை சற்றே மாற்றி சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் ஜேம்ஸ் கன்.
ஓரிரு படங்களை தவிர டிசி நிறுவனத்துக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான, மார்வெல் அளவுக்கு வசூல் சாதனை படங்கள் எதுவும் கிடையாது. இப்படியான சூழலில் ஜேம்ஸ் கன் மட்டுமே டிசி / வார்னர் பிரதர்ஸின் தற்போதைய ஒரே நம்பிக்கை.
வரும் ஜூலை 11 வெளியாக உள்ள ‘சூப்பர் மேன்’ படத்தின் ரிசல்ட்தான் டிசி யுனிவர்ஸின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்னும் நிலையில், டிசி ரசிகர்கள் படம் வரும் சற்றே அமைதி காப்பது சிறந்தது என்கின்றனர் ஹாலிவுட் விமர்சகர்கள்.