இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேபி ஜான்’. தமிழில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில், உடலைப் பாதுகாப்பது குறித்து நெறியாளர் கேட்ட கேள்விக்கு, நடிகர் வருண் தவான் பதில் கூறுகையில், “காலையில் வெறும் வயிற்றில் பிளாக் காஃபி குடிக்காதீர்கள். அது குரல், செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னை இல்லாதவர்களுக்கும் தொடர்ந்து குடிப்பதால் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எதாவது சாப்பிட்டுவிட்டு பிளாக் காஃபி குடியுங்கள்.” என்று கூறினார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், சமூக வலைதளங்களில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் பிரசாந்த் தேசாய், வருண் தவாணின் பேச்சுக்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “நான் 15 ஆண்டுகளாக வெறும் வயிற்றில் பிளாக் காஃபி குடித்து வருகிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லாமல்தான் இருக்கிறேன். வருண் தவான் குறிப்பிட்டது எல்லோருக்கும் நடக்கும் என்பதில்லை. நம் உடல் என்பது கைரேகை போல ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. ஒருவருக்கு ஏற்படும் அதே விளைவு மற்றவருக்கு ஏற்படும் என்பது சாத்தியமில்லை. எனவே, உங்களின் உடலுக்கு என்ன தேவையோ அதை பரிசோதித்து, ஆலோசனையுடன் செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக வருண் தவான், “நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பிளாக் காஃபி உங்களை பாதிக்காதது குறித்து மிகவும் மகிழ்ச்சி. ஆரோக்கியமாகவும், மிகவும் பொருத்தமாகவும் இருக்கிறீர்கள். மேலும், இந்தப் புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்த நான் உதாரணமானதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.