பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘தி ராஜா சாப்’. இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பு பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. முதலில் 2025 பொங்கல் வெளியீடாக இருந்தது. பின்பு அதிலிருந்து பின் வாங்கி ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கும் வாய்ப்பில்லை.
ஏனென்றால் இன்னும் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட வேண்டும். இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே தெரியாமல் உள்ளது. இதனால் ஹனு ரவிப்புடி படத்தில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். விநியோகஸ்தர்கள் மத்தியில் இதன் வெளியீடு எப்போது என்ற கேள்விக்கு விடையே இல்லாமல் இருக்கிறது.
ஹாரர் படம் என்பதால் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு இறுதியில்தான் இப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.