’பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் சிலம்பரசன் நடிக்க உள்ளார்.
நடிகர் சிலம்பரசன் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது புதிய பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சிலம்பரசன் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
சிலம்பரசனின் 49வது படமான இது க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் கையில் புத்தகம், அதற்குள் ரத்தம் தோய்ந்த ஒரு வெட்டுக் கத்தி சகிதம் காட்சியளிக்கிறார் சிம்பு.
இப்படத்துக்கு முன்பாக ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சிலம்பரசன் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வரவேற்பை பெற்றது. அஸ்வத் தற்போது இயக்கி வரும் ‘டிராகன்’ படம் ரிலீஸ் ஆன பிறகு இப்படத்தின் பணிகள் தொடங்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர்48’ படத்தில் நடித்து வருகிறார். கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார்.