அங்க நான் போன சமயத்துல அங்கிருந்து மக்கள என்னை அரவணைச்சு பேசினாங்க. மகிழினிங்கிற பெயரை வச்சு நான் இலங்கையைச் சேர்ந்தவள்னு நினைச்சு அங்க இருந்து இங்க ரெக்கார்டிங் வரமுடியாதுனு நினைச்சு கூப்பிடாமல் இருந்திருக்காங்க. ஆனால், அந்த அடையாளம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கு.
அதுபோல அமெரிக்காவுக்கும் இந்த பாடலினால போனேன். இமான் சார் இந்தப் பாடலைப் பாடும்போது ஜாலியாக பாடுங்கனுதான் சொன்னாங்க. அதே மாதிரி, பிரபு சாலமன் சார் `நல்லா பாடுறீங்க மா’னு சொன்னாரு.
இப்படியான விஷயங்கள் அவங்க சொன்னது நம்பிக்கையைக் கொடுத்தது.” என்றவரிடம் இந்தப் பாடலுக்கு அப்போது கிடைத்த அங்கீகாரங்கள் குறித்து கேட்டோம். அவர், “ முக்கியமாக, இந்தப் பாடலுக்கு ஆனந்த விகடன்ல அப்போ எனக்கு விருது கொடுத்தாங்க.

ஒரு முறை கச்சேரிக்கு போயிருந்தப்போ, ஒரு அம்மா என்கிட்ட `முன்னாடியெல்லாம் என் குழந்தைக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவேன். இப்போ சொய் சொய் பாடலைக் போட்டுக் காட்டிதான் சோறு ஊட்டுறேன்’னு சொன்னாங்க. இதுதான் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கிறேன்.” எனக் கூறினார். மகிழினி பாடிய பாடல்கள் எதுவும் சமீப நாட்களில் வெளிவரவில்லை.
அவரிடம் `எப்போ உங்க குரலை மீண்டும் திரையில் பார்க்கலாம்’ எனக் கேட்டால்…“என்னை ரெக்கார்டிங் கூப்பிட்டால் கண்டிப்பாகப் போவேன். நானும் இப்போ வாய்ப்புகளுக்கு கேட்டுட்டுதான் இருக்கேன். நிச்சயம் பாடுவேன். உங்களுக்கு பாடல்களைக் கொடுப்பேன்” என்ற நேர்மறையான வார்த்தைகளோடு முடித்துக் கொண்டார்.