காதல் பிரேக் அப் ஆகி, காதலி நிலாவின் (அனிகா சுரேந்திரன்) நினைவில் இருக்கிறார் பிரபு (பவிஷ்). ஆனால், வீட்டில் அம்மா – அப்பா (சரண்யா பொன்வண்ணன் ஆடுகளம் நரேன்) வற்புறுத்தலால் ப்ரீத்தியை (ப்ரியா பிரகாஷ் வாரியர்) பெண் பார்க்கப் போகிறார். அவரிடம் தன் காதலி பற்றியும் காதல் முறிந்ததைப் பற்றியும் சொல்கிறார் பவிஷ். பின் சில நாட்கள் கழித்து பிரபுவுக்கு நிலாவின் திருமண பத்திரிகை வருகிறது. ப்ரீத்தியின் யோசனைப்படி அந்தத் திருமணத்துக்குப் பிரபு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது, நிலாவும் பிரபுவும் மீண்டும் இணைந்தார்களா? என்பது கதை.
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்குநராகக் களமிறங்கியுள்ள மூன்றாவது படம். இன்றைய 2கே தலைமுறையின் வாழ்க்கையையும் அவர்களுடைய ‘ஹை பை’ காதலையும் குறையும் மிகையும் இல்லாமல் ஜாலியாக சொல்லி இருக்கிறார் இதில். காதலர்களின் நண்பர்கள் காதலர்களாவதுதான் கதை. ஆனால், இருவரும் பரஸ்பரம் இம்ப்ரஸ் ஆவதில் தொடங்கி, அடுத்தடுத்து வரும் எந்தக் காட்சியிலும் புதுமையும் இல்லை. ‘இது வழக்கமான காதல் கதைதான்’ என்று டைட்டிலிலேயே நம்மை தயார்படுத்தி விடுவதால் அதை விட்டுவிடலாம்.
இந்த 2கே காலத்திலும் காதலுக்குக் குறுக்கீடாக வரும் கவுரவம், அந்தஸ்து போன்ற காட்சிகளிலும் வசனங்களிலும் வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.
ஆசை ஆசையாகக் காதலித்த நாயகன், ஓர் உண்மை தெரியவந்ததும் காதலைத் துறப்பதாகக் காட்டப்படும் சென்டிமென்ட் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் காதலர்கள் காதலிக்கத் தொடங்குவது, ஊர் சுற்றுவது, பிரிவது என்று வருகிற பல காட்சிகளில் நண்பனாக வரும் மேத்யூ தாமஸ், தனது டைமிங் காமெடியில், படத்தின் தொய்வைப் பாதகமின்றிக் காப்பாற்றுகிறார், கடைசி வரை. பெரும்பாலான காட்சிகளில் மதுவை ‘நார்மலைஸ்’ செய்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்.
நண்பர்களாக வரும் வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ஆங்கிலம் பேசும் அம்மா சரண்யா பொன்வண்ணன் என பெரும்பாலான கதாபாத்திரங்கள் தங்கள் பங்குக்கு காமெடி ஏரியாவில் ஸ்கோர் செய்துவிட்டுப் போவதை ரசிக்க முடிகிறது.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் பவிஷ், அரட்டை, மகிழ்ச்சி, துக்கம், சோகம் என எல்லாக் காட்சிகளிலும் தனது மாமா தனுஷை பிரதிபலிக்க முயல்கிறார். ‘நான் குக் இல்ல, செஃப்’ என்று அடிக்கடி சொல்வது உட்பட சில காட்சிகளில் அவர் ரசிக்க வைத்தாலும் எமோஷனல் காட்சிகளில் இன்னும் மெனக்கெட வேண்டும்.
நாயகி அனிகா சுரேந்திரனுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை ஓரளவுக்குப் பூர்த்தி செய்திருக்கிறார். ப்ரியா பிரகாஷ் வாரியரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். நாயகனின் நண்பராக மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், தோழி ராபியா கதூன், பிற்பாதியில் வரும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நல்வரவுகள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் தாளம் போடவும் பின்னணி இசை கதையோடு இழுத்துச் செல்லவும் வைக்கின்றன. லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவிலும் பிரசன்னா ஜி.கே. வின் படத்தொகுப்பும் ஜாக்கியின் கலை இயக்கமும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. குறைகள், லாஜிக் சிக்கல்கள் என இருந்தாலும் பொழுதுபோக்குக்கு கேரண்டி தருகிறது, இந்தப் படம்.