கேரளாவைச் சேர்ந்த மாணவர் மிஹிர் முகமது தற்கொலை தொடர்பாக சமந்தா காட்டமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் சக மாணவர்களால் கிண்டல் கேலி ஆளான 15 வயது மாணவர் மிஹிர் முகமது தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணமுள்ளன. இது குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
தற்போது மிஹிர் முகமது தற்கொலை குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ”2025 வந்துவிட்டது. ஆனாலும் மற்றுமொரு பிரகாசமான இளைஞரின் உயிரை நாம் இழந்துவிட்டோம். வெறுப்பும், விஷமும் நிறைந்த சிலர் ஒருவரை விளிம்புக்கு தள்ளியிருக்கின்றனர், அவர்களால் அந்த உயிர் பறிபோயிருக்கிறது. கொடுமைப்படுத்துவது, துன்புறுத்துவது, ராகிங் செய்வதெல்லாம் ‘தீங்கில்லாத சம்பிரதாயங்கள், சடங்குகள்’ மட்டும் அல்ல என்பதை மிஹிரின் துயர மரணம் நமக்கு அழுத்தமாக நினைவூட்டியிருக்கிறது. அவை மனரீதியான, உணர்வுரீதியான, சில நேரங்களில் உடல் ரீதியான வன்முறையும் கூட.
நம்மிடையே கடுமையான ராகிங்குக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. ஆனாலும் நமது மாணவர்கள் அவர்கள் பிரச்சினையைப் பற்றி வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக அவதிப்படுகின்றனர். துணிந்து பேச பயப்படுகின்றனர், விளைவுகளை நினைத்து பயப்படுகின்றனர். யாரும் கேட்க மாட்டார்கள் என்று பயப்படுகின்றனர். நாம் எங்கு தோற்றுக்கொண்டிருக்கிறோம்?
இதற்கு அனுதாபங்கள் மட்டுமே போதாது. நடவடிக்கை வேண்டும். அதிகாரிகள் இந்தப் பிரச்சினையின் வேர் வரை செல்வார்கள் என்று நம்புகிறேன். உண்மை, இந்த அமைப்பால் மவுனமாக்கப்படாது என்று நம்புகிறேன். மிஹிருக்கு நீதி தேவை. அவன் பெற்றோருக்கு இதைப் பற்றிய சரியான முடிவு தேவை. கடுமையான, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்னைப் பின் தொடரும் அனைத்து இளைஞர்களூக்கும் நான் சொல்லிக் கொள்வது – உங்கள் கண் முன்னால் துன்புறுத்தல் நடந்தால், துணிந்து பேசுங்கள். பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு கொடுங்கள்.
அமைதியா இத்தகைய கொடுமைகளை அனுமதிக்கிறது? நீங்கள் துன்புறுத்தப்பட்டிருந்தால் உதவியை நாடுங்கள்.
எப்போதுமே இதற்கு ஒரு தீர்வு உண்டு. நம் குழந்தைகளுக்கு பயத்தையும், சரணடைவதையும் அல்ல, கருணையையும், பச்சாதாபத்தையும் கற்றுத் தருவோம். மிஹிரின் மரணம் நம்மை விழித்தெழ வைக்க வேண்டும். அவனுக்கான நீதி கிடைக்கும் போது மற்றுமொரு மாணவனுக்கும் அந்தத் துன்பம் நிகழாது என்பது உறுதியாகும். நாம் அவனுக்கு இதையாவது செய்யக் கடமை பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் சமந்தா.