மதுரை: “எவ்வளவோ பாடல் பாடினாலும் ‘வாராரு வாராரு அழகர் வாராரு ’ என்ற பாடல் மூலமே பிரபலமானேன். இதற்காக கேப்டன் விஜயகாந்துக்கு கடமைப்பட்டுள்ளேன்,” என்று, இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி ஜனவரி 18-ல் மதுரை யா.ஒத்தக்கடை அருகிலுள்ள மைதானத்தில் நடக்கிறது.இது தொடர்பாக மதுரை சுற்றுச்சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழாவின்போது நான் இசையமைத்த எனது பாடலான ‘வாராரு வாராரு அழகர் வாராரு ’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும். எவ்வளவோ பாடல் பாடினாலும் ‘வராரு வராரு கள்ளழகர் வாராரு’ என்ற பாடல் மூலமே பிரபலமானேன். அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இதற்காக கேப்டன் விஜயகாந்திற்கு கடமைப்பட்டுள்ளேன். இந்த பாடலை முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்து இருக்கிறார்.
மதுரை இசை நிகழ்ச்சியில் பாடகர் மனோ, அனுராதா ஸ்ரீராம், அஜய் கிருஷ்ணா, சபேஷ், முரளி, ஸ்ரீ காந்த் தேவா உள்ளிட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். காலம் கடந்து எனது இசையும், இளையராஜாவின் இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன். எனக்கு அனிருத் இசை ரொம்ப பிடிக்கும். அவர் லேட்டஸ்ட், வேகமாக இருக்கிறார். நடிக்க நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் விருப்பமில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எவ்விதமான அவமதிப்பும் நடக்கவில்லை. இதை அவருமே கூறியிருக்கிறார். தற்போதைய இளம் இசை அமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கின்றனர். எனது பாடல் 35 ஆண்டுக்கு பிறகு தற்போதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியம். மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.