ஒரு திரைப்படத்தின் கதையை முழுமையாகப் பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு நடிகர்களின் பங்கு முக்கியமானதொரு விஷயம். எழுத்தைக் காட்சிகளாக பார்வையாளனுக்குக் கடத்துவதில் நடிப்பு ஒரு பிரதான பங்களிப்பைச் செலுத்துகிறது. கதாநாயகன்களைத் தாண்டி படத்தின் அத்தனை துணை கதாபாத்திரங்களும் அதற்கு முக்கிய பங்காற்றுவது அவசியம். ஹாலிவுட் வரலாற்றில் முன்னணி கதாநாயகன்களுக்கு நிகரான கதையம்சமும் திருப்பங்களும் படத்தின் குணசித்திர கதாபாத்திரங்களுக்கும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அதுபோன்ற குணசித்தர கதாபாத்திரங்களுக்கும் முக்கிய டிராக் கொண்ட கதைகளை முன்னெப்போதையும்விட தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக அதிகமாகப் பார்க்க முடிகிறது. கதையின் போக்கில் தனக்கான மீட்டரை கச்சிதமாகப் பிடித்து பல குணசித்தர நடிகர்களும் தங்களின் நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு வலுசேர்த்துவருகின்றனர். வாகை சந்திரசேகர், நாசர், பிரகாஷ்ராஜ், இளவரசு, சமுத்திரக்கனி என பல ஆண்டுகளாக கவனிக்கத்தக்க பங்களிப்பைச் செய்பவர்களைத் தாண்டி, சமீபத்திய படைப்புகளில் கவனம் ஈர்த்த குணசித்தர நடிகர்களைப் இக்கட்டுரையில் பார்க்கலாம்