‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா உடன் மோதல் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி விளக்கமளித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இதன் படப்பிடிப்பில் சுந்தர்.சி – நயன்தாரா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக இருவருமே விளக்கம் அளிக்காமல் இருந்தனர். தற்போது ‘கேங்கர்ஸ்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், இந்த சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.
நயன்தாரா உடன் மோதலா என்ற கேள்விக்கு சுந்தர்.சி, “அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. எதனால் அப்படியொரு செய்தி பரவியது என்று தெரியவில்லை. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கிறது. முதலில் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அதே வேளையில் ‘கேங்கர்ஸ்’ படத்தின் பணிகளும் இருந்தது. ஆகையால் சென்னையிலே படப்பிடிப்பை தொடங்கிவிட்டோம்.
நயன்தாரா ரொம்ப அர்ப்பணிப்பான நடிகை. அரை மணி நேரம் படப்பிடிப்பு தாமதமானால், கேரவேன் செல்லுங்கள் என்பேன். இல்லை சார்… இங்கேயே இருக்கிறே என்பார். படப்பிடிப்பு தளத்துக்குள் வந்துவிட்டால், பிரேக், பேக்கப் சொன்னால் மட்டும் தான் கேரவேன் செல்வார். இந்த மாதிரி செய்திகள் வந்தால், அனைத்துக்கும் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார் சுந்தர்.சி.