வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி உட்பட பலர் நடித்த படம், ‘விடுதலை 2’. இதில் பண்ணையார் கதாபாத்திரத்தில் ஜெயவந்த் நடித்திருந்தார். இவர், ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய காளி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:
வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சின்ன கதாபாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் முயற்சி செய்துகொண்டிருந் தேன். அப்படித்தான் இந்தப் பட வாய்ப்புக் கிடைத்தது. நெகட்டிவ் கேரக்டர் என்றாலும் கதையில் எனக்கும் முக்கியத்துவம் இருந்ததில் மகிழ்ச்சி. வில்லனாக நடிக்கும்போது ஒரு எல்லைக்குள் நின்று நடிக்காமல் வெவ்வேறு விதமாக நம்மை வெளிப்படுத்த முடியும். இந்தப் படத்துக்காக சோளக்காட்டில் நடக்கும் ஆக்ஷன் காட்சியில் நடிக்கச் சிரமப்பட்டேன். அதை 18 நாட்கள் படமாக்கினார்கள்.
வெற்றிமாறன், விஜய் சேதுபதி ஆகியோரிடம் நடிப்பின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இதில் என் நடிப்பைப் பலர் பாராட்டுகிறார்கள். என் நடிப்பின் மீது இப்போது நம்பிக்கை வந்திருக்கிறது. இனி, ஹீரோ என்றில்லாமல் சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு ஜெயவந்த் கூறினார்.