கேரளாவில் இருந்து தன்னைப் பார்க்க நடந்து வந்த ரசிகரை படப்பிடிப்பு தளத்தில் விஜய் சந்தித்து பேசியிருக்கிறார்.
ஜனவரி 1-ம் தேதி கேரளாவில் இருந்து உன்னி கண்ணன் என்ற விஜய் ரசிகர், அவரை சந்திப்பதற்காக தமிழகத்துக்கு நடைபயணம் மேற்கொண்டார். தினமும் அவரது சமூக வலைதள பக்கத்தில் தற்போது எங்கு இருக்கிறேன், என்ன சாப்பிட்டேன் உள்ளிட்ட விஷயங்களை பகிர்ந்துக் கொண்டே தமிழகத்துக்கு நடந்து வந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலானது.
கழுத்தில் விஜய் படத்தை தொங்கவிட்டப்படி, கைகளிலும் விஜய்யின் புகைப்படங்களை வைத்துக் கொண்டே நடந்து வந்தார். உன்னி கண்ணனின் வீடியோ பதிவுகள் விஜய்யின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரோ தனது மண்டபத்தில் சந்திக்க திட்டமிட்டார். ஆனால், அவரது நடைபயணம் எதிர்பார்த்ததை விட தாமதமானது. இதனால் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார் விஜய்.
உன்னி கண்ணன் சென்னை வந்தவுடன் அவரை படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து சந்தித்துள்ளார் விஜய். ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தளத்தில் தொலைபேசிக்கு அனுமதியில்லை என்பதால், விஜய் – உன்னி கண்ணன் சந்திப்பு புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களில் அனுப்பி வைப்பதாக விஜய் தரப்பு தெரிவித்திருக்கிறது.
இதனை உன்னி கண்ணன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில் பத்து நிமிடங்களுக்கு மேல் விஜய்யை அவரது கேராவேனில் சந்தித்து பேசியதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் புகைப்படம் மற்றும் வீடியோ கிடைத்தவுடன் பதிவிடுவதாகவும் கூறியுள்ளார்.