‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை கயாடு லோஹர்.
பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டிராகன்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கயாடு லோஹர். அவரது நடனம், காட்சியமைப்புகள் என இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார் கயாடு லோஹர். இணையத்தில் தொடர்ச்சியாக இவரது வீடியோக்களை ரசிகர்கள் பகிரத் தொடங்கினார்கள்.
இந்த வரவேற்பை முன்வைத்து பல்வேறு படங்களில் நடிக்க கயாடு லோஹரை அணுகப்பட்டு வருகிறார். தற்போது அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’, காளிதாஸ் நடிக்கும் ‘நிலா வரும் வேளை’, விஸ்வாக் சென் நடிக்கும் ‘ஃபங்கி’, நிவின் பாலி நடிக்கும் ‘தாரம்’ ஆகிய படங்களை உறுதி செய்திருக்கிறார். மேலும் ரவி தேஜாவுடன் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தப் படங்களில் நடிக்கவே 2025-ம் ஆண்டு இறுதிவரை தேதிகளை ஒதுக்கியிருக்கிறார் கயாடு லோஹர். இவை மட்டுமன்றி தமிழில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் நடிக்கவும் அணுகி வருகிறார்கள்.