பிரபல மலையாள நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப், சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார். 84 நாட்கள் சிறையில் இருந்த அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சுனில்குமார் என்கிற பல்சர் சுனி சேர்க்கப்பட்டுள்ளார். திலீப் 8-வது குற்றவாளி. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவ், நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும் அவர் அதை பார்க்கும்போது, அருகில் தான் இருந்ததாகவும் நடிகர் திலீப்பின் நண்பரும் இயக்குநருமான பாலசந்திர குமார் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளைக் கொல்ல திலீப், சதித்திட்டம் தீட்டியதாகவும் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் போலீஸுக்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது. இயக்குநர் பாலசந்திரகுமாரும் சாட்சியம் அளித்திருந்தார். இந்நிலையில் சிறுநீரகக் கோளாறு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கேரள மாநிலம் செங்கணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார்.