பழம் பெரும் நடிகையும், நடிகர் ஏவிஎம்.ராஜனின் மனைவியுமான புஷ்பலதா, வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். தமிழில் “கொங்கு நாட்டு தங்கம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்னரே தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை புஷ்பலதா தமிழில் ‘யாருக்கு சொந்தம்’, ‘நானும் ஒரு பெண்’, ‘சிம்லா ஸ்பெஷல்’, ‘கற்பூரம்’, ‘பார் மகளே பார்’, ‘புதுவெள்ளம்’, ‘சாரதா’, ‘ஜீவனாம்சம்’ உள்பட 100க்கும் மேலான படங்களில் ஹீரோயினாகவும், குணசித்திரமாகவும் நடித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சில படங்களில் நடித்திருப்பதால், புஷ்பலதாவின் நினைவுகள் குறித்து அவரிடம் கேட்டோம்.
”ஏவிஎம். நிறுவனம் தயாரிப்பில் திருலோகசந்தர் இயக்கிய ‘நானும் ஒரு பெண்’ படத்தில் தான் ராஜன் அறிமுகமானார். அதில் இருந்து தான் அவரை எல்லோரும் ஏவிஎம். ராஜன் என சொல்ல ஆரம்பித்தனர். அந்த படத்தின் நாயகி புஷ்பலதா. இந்த படத்திற்கு முன்னரே அவர் ‘ஆலயமணி’, ”போலீஸ்காரன் மகள்’, ‘சாரதா’, ‘பணம் பந்தியிலே’ என பல படங்களில் நடித்திருக்கிறார். ‘நானும் ஒரு பெண்’ படத்தில் புஷ்பலதா மாலதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராஜனுக்கும் புஷ்பலதாவிற்கும் இந்த படத்தில் தான் காதல் அரும்பியது. அதன் பின் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
புஷ்பலதா, கதாநாயகி, குணசித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எனது இயக்கத்தில் ‘ஊருக்கு உபதேசம்’, ”சகலகலா வல்லவன்’ என சில படங்களில் நடித்திருக்கிறார். திறமையான நடிகை. அவருடன் பணியாற்றியது இனிய தருணங்கள். எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்கிறார் எஸ்.பி.முத்துராமன்.
மறைந்த புஷ்பலதா, புஷ்பாராஜன் என்ற பெயரில் சிவாஜி நடித்த ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு’ உள்பட சில படங்களை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…