மும்பையில் நடிகர் சயிப் அலிகான், அவரது மனைவி நடிகை கரீனா கபூர் வசிக்கும் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், சயிப் அலிகானை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார். அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் அபாய கட்டத்தை தாண்டியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் (54) மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்தார். கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சத்தம் கேட்டு நடிகர் சயிப் அலிகான் எழுந்தார். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபரை அவர் பிடிக்க முயன்றார். அப்போது மர்மநபர் கத்தியால் 6 முறை நடிகர் சயிப் அலிகானை குத்தினார். இதில் சயிப் அலிகானுக்கு பல இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. உடல் முழுவதும் ரத்தம் வடிந்தது.
இதனால் சயிப் அலிகானை அவரது மூத்த மகன் இப்ராகிம் மற்றும் வீட்டில் வேலை செய்யும் நபர் ஆகியோர் மும்பை பாந்த்ரா பகுதியில் லீலாவதி மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலில் 6 இடங்களில் கத்திக் குத்து காயம் இருந்ததாக டாக்டர் நீரஜ் உத்தாமணி தெரிவித்தார். ஒரு காயம் முதுகுத் தண்டுக்கு அருகே ஆழமாக இருந்தது. இதனால் அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதற்குப் பின் சயிப் அலிகான் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளி்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்களும், அவரது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். அவரது இடது மணிக்கட்டிலும் ஆழமான வெட்டு காயம் உள்ளது. அதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.
நடிகர் சயிப் அலிகான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு வசதிகள் உள்ள கட்டிடம். பாதுகாவலர்களை மீறி கொள்ளையன் எப்படி நுழைந்தார்? அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து அவர் தாவி வந்தாரா ? என பாந்த்ரா போலீஸார் சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நடிகர் சயிப் அலிகான் சார்பில் அவரது குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ நடிகர் சயிப் அலிகான் வீட்டில் கொள்ளை முயற்ச்சி நடைபெற்றுள்ளது. கத்திக் குத்து காயம் அடைந்த சயிப் அலிகான் சிகிச்சை பெற்று வருகிறர். அவரது ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும். நடைபெற்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் சென்றனர்: நடிகர் சயிப் அலிகானை அவரது மகன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்களது கார் தயார் நிலையில் இல்லை. இதனால் அவர் நேரத்தை வீணடிக்காமல் அருகில் இருந்த ஆட்டோவை அழைத்து அதில் நடிகர் சயிப் அலிகானை லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது நடிகை கரீனா கபூரும் அருகில் இருந்தார். அவர்களது வீட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் மருத்துவமனை இருந்ததால், சயிப் அலிகான் உடனடியாக சிகிச்சை பெற முடிந்தது.