ஹைதராபாத்: “ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரபலங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் – ஒழுங்கில் சமரசம் செய்யக்கூடாது” என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தது சம்பந்தமான வழக்கில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளரும் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் உட்பட தெலுங்கு திரையுல முக்கிய பிரமுகர்கள், மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை இன்று (வியாழக்கிழமை) சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி, “ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரபலங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் – ஒழுங்கில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது” என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களிடம் தெரிவித்ததாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், மாநில அரசு திரைப்படத் தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்களுடன் துணை நிற்கும் என்றும் முதல்வர் உறுதியளித்தார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
முதல்வரைச் சந்தித்தக் குழுவில், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், சுரேஷ் டகுபதி, சுனில் சங்கர், சுப்ரியா நாகவம்சி மற்றும் புஷ்பா 2 படத் தயாரிப்பாளர்கள் நவீன் யேர்னேனி மற்றும் ரவி சங்கர், நடிகர்கள் வெங்கடேஷ் டகுபதி, நிதின், வருண் தேஜா, சித்து ஜென்னலகட்டா, கிரண் அப்பாவரம் மற்றும் சிவ பாலாஜி, இயக்குநர்கள் திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ், ஹரிஷ் சங்கர், அணில் ரவிபுதி மற்றும் பாபி ஆகியோர் இருந்தனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்பட சிறப்புத் திரையிடலின் போது, ஹைதராபாத்தில் உள்ள சத்தியா திரையரங்கிற்கு நடிகர் அல்லு அர்ஜுன் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் கடுமையாக காயமடைந்தார். பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அன்றே அவருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
சிறையில் இருந்து வந்த அல்லு அர்ஜுனை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று சந்தித்து தங்களின் ஆதரவினைத் தெரிவித்தனர். இந்நிலையில், சமீப நாட்களில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பிரபலங்களையும் தெலுங்கு திரையுலகினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்த பிரபலங்கள், உயிரிழந்த ரேவதி மற்றும் சிகிச்சை பெற்று வரும் அவரது மகன் ஸ்ரீதேஜ் ஆகியோர் குறித்து சிந்திக்கவில்லை என்று சாடியிருந்தார்.
மேலும், இனி திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கும், டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்காது என்றும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தெலங்கானா ஒளிப்பதிவுத் துறை அமைச்சர் கோமடிரெட்டி வெங்கட் ரெட்டி, வரலாறு, சுதந்திரப் போராட்டம், போதைப்பொருள்களுக்கு எதிரான படங்களுக்கு மட்டுமே டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இந்தப் பின்னணியில் முதல்வர் ரேவந்த் ரெட்டியுடனான தெலுங்கு திரையுலகினரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
அரசின் புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தப்படுமானால், சங்கராந்தியின்போது வெளியாகவிருக்கும் ராம் சரணின் கேம் சேஞ்சர், நந்தமுரி பாலகிருஷ்ணாவின் டாக்கு மகாராஜ், வெங்கடேஷின் சங்கராந்திகி வஸ்துன்னாம் ஆகிய படங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும். தொடக்க வார இறுதிகளில் வசூலைப் பெற இந்த டிக்கெட் விலை உயர்வையே தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.