‘த்ரிஷ்யம் 3’ படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் நடிகர் மோகன்லால்.
‘த்ரிஷ்யம் 3’ படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதனை உறுதியாக்கும் விதமாக மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் ‘த்ரிஷ்யம் 3’ படத்தினை உறுதி செய்திருக்கிறார்.
“கடந்தவை எதுவும் அமைதியாக இருக்காது. ‘த்ரிஷ்யம் 3’ உறுதி” என்று பதிவிட்டு ஜீத்து ஜோசப், ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணி இணைந்து உருவாக்கிய படம் ‘த்ரிஷ்யம்’. அதனைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 2’ உருவாகி அதுவும் வரவேற்பைப் பெற்றது. அக்கதையின் இறுதி பாகமாக ‘த்ரிஷ்யம் 3’ இருக்கும் என சில மாதங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள், எதிர்பாராத திருப்பங்களே த்ரிஷ்யம் படத்தின் கதை. மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் 2’ படங்கள் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. 2013-ல் த்ரிஷ்யம் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்த பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் லிமிமெட் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜோட் பிலிம்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளது.
கொரியன் மொழியில் த்ரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், 10 நாடுகளின் மொழிகளில் ‘த்ரிஷ்யம்’ படங்களை ரீமேக் செய்ய பனோரமா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
The Past Never Stays Silent
Drishyam 3 Confirmed!#Drishyam3 pic.twitter.com/xZ8R7N82un
— Mohanlal (@Mohanlal) February 20, 2025