‘த்ரிஷ்யம் 3’ கண்டிப்பாக உருவாகும் என மோகன்லால் உறுதிச் செய்திருக்கிறார்.
சென்னையில் ‘பரோஸ்’ படத்தினை விளம்ரப்படுத்தி வருகிறார் மோகன்லால். இதற்காக பல்வேறு பேட்டிகள், நிகழ்ச்சிகள் என கலந்துக் கொண்டார். அதில் பேட்டி ஒன்றில் பான் இந்தியா படங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, ‘த்ரிஷ்யம்’ குறித்து பேசியுள்ளார். மேலும், கண்டிப்பாக ‘த்ரிஷ்யம் 3’ உருவாகும் என உறுதியளித்துள்ளார் மோகன்லால்.
ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணி இணைந்து உருவாக்கிய படம் ‘த்ரிஷ்யம்’. இப்படத்துக்கு இந்தியளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்து பல்வேறு மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 2’ உருவாகி அதுவும் வரவேற்பைப் பெற்றது. அக்கதையின் இறுதி பாகமாக ‘த்ரிஷ்யம் 3’ இருக்கும் என சில மாதங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் பேசியிருந்தார்.
‘த்ரிஷ்யம் 3’ குறித்து ஜீத்து ஜோசப் “த்ரிஷ்யம் 3 படத்தின் கிளைமாக்ஸ் ஏற்கெனவே என் மூளையில் இருக்கிறது நான் அதை மோகன்லால் சாரிடம் சொல்லிவிட்டேன். அவருக்கும் அது பிடித்து விட்டது. அக்கதையில் ஒர் இடத்தை இன்னும் கூர்தீட்ட வேண்டும்” என்று கூறியிருந்தார். இருவரின் பேட்டியின் மூலம், ‘த்ரிஷ்யம் 3’ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.