பாலிவுட்டில் ஒரே ஆண்டில் ஆயிரம் கோடி வசூலை கொடுத்த இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் நடிகர் ஷாருக்கான். துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தனக்கு ஏற்பட்ட தோல்விகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
அதோடு எதிர்காலத் தலைமுறையை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். ஷாருக் கான் தனது உரையில்,” தோல்விகளுக்காக அழக்கூடாது. ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். திரைப்படத்துறையை எடுத்துக்கொண்டால் ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டது என்றால் அதற்கு சதி காரணம் கிடையாது. அந்தப் படத்தை எடுத்தவரால் பார்வையாளர்களைக் கவர முடியவில்லை என்றுதான் அர்த்தம். நீங்கள் தோல்வி அடையும்போது உங்களது தயாரிப்பு, உங்கள் சேவை அல்லது வேலை சரியில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் வேலை செய்யும் சூழ்நிலையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். மக்கள் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
நான் விரும்பும் நபர்களிடம் ஒரு உணர்ச்சியை என்னால் வெளிப்படுத்த முடியாவிட்டால், எனது தயாரிப்பு சரியாக வேலை செய்யவில்லை என்று தான் அர்த்தம்” என்று தெரிவித்தார். உங்கள் வேலையில் தோல்வியை சந்தித்தீர்களா என்று கேட்டதற்கு,”அந்த நினைவுகளை நினைக்கவே வெறுப்பாக இருக்கிறது. நான் அதற்காக பாத்ரூமில் மிகவும் அழுதிருக்கிறேன். நான் அதை யாரிடமும் காட்டுவதில்லை. உலகம் உங்களுக்கு எதிராக இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். உங்களால் அல்லது உலகம் உங்களுக்கு எதிராக சதி செய்வதால் உங்கள் படம் தவறாக நடக்கவில்லை. நீங்கள் அதைச் செய்தீர்கள் என்று நீங்கள் நம்ப வேண்டும். பின்னர் அதனைக் கடந்து செல்ல வேண்டும்.
விரக்தியின் தருணங்கள் இருந்தாலும், ஒருவர் அதிலிருந்து மீண்டு வர கற்றுக்கொள்ள வேண்டும். உலகம் உங்களுக்கு எதிராக இல்லை என்பதால் நீங்கள் அதை செய்ய வேண்டும். உங்களுக்கு மட்டும் தவறு நடக்கிறது என்று நீங்கள் நம்பக்கூடாது. வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்கிறது. அதற்காக வாழ்க்கையை நீங்கள் குறை சொல்லக்கூடாது”என்று குறிப்பிட்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…