தமிழில் மகத்தான வெற்றி பெற்ற ‘மதகஜராஜா’, தெலுங்கு பதிப்பில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்பதையே தற்போதைய வசூல் நிலவரங்கள் காட்டுகின்றன.
நடிகர் விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’. தயாரிப்பு நிறுவனத்துக்கு இருந்த பிரச்சனையால் இப்படத்தின் ரீலிஸ் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இறுதியில், இப்படத்துக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது.
12 ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆனாலும், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மக்கள் மத்தியில் இப்படம் வெற்றி பெறுவதற்கு சந்தானத்தின் காமெடியான கவுண்ட்டர்களும் பெரிதும் உதவின. இப்படத்தில் அஞ்சலி, வரலெட்சுமி சரத்குமார், சோனு சூட், மணிவண்ணன், மனோபாலா, சடகோபன் ரமேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியால், தெலுங்கிலும் இப்படம் வெளியாகும் என இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்திருந்தார். அதன்படி, கடந்த 31-ம் தெலுங்கிலும் இப்படம் வெளியானது. ஆனால் , எதிர்பார்த்தபடி தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பை பெறல்லை.
தெலுங்கில் ‘மதகஜராஜா’ படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி, முதல் நாளில் இப்படம் ரூ.40 லட்சம் வசூல் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளில் ரூ.30 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. முதல் வாரத்தில், ‘மதகஜராஜா’ ரூ.1 கோடி வசூலைக் கூட தாண்டவில்லை. அதேவேளையில், தமிழில் இப்படம் ஏற்கெனவே ரூ.50 கோடி வசூலை நெருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.