துல்கர் சல்மான் நடித்து வரும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளத்தில் நடிகர் துல்கர் சல்மான் பகிர்ந்துள்ளார். “காலத்தால் அழிக்க முடியாத கதையில் காலத்தால் அழிக்க முடியாத பாத்திரத்தில் நடிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். திரைப்படத் துறையில் தனது 13-வது ஆண்டினை அவர் கொண்டாடுகிறார். கடந்த 2012-ல் மலையாளத்தில் ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் இதே பிப்ரவரி 3-ம் தேதி வெளியானது.
கருப்பு வெள்ளை நிறத்தில் வெளியாகி உள்ள ‘காந்தா’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கோட் சூட் அணிந்துள்ளார் துல்கர் சல்மான். அவரது மீசை அந்த கால ஸ்டைலில் மெல்லியதாக உள்ளது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் பூஜையுடன் பணிகள் தொடங்கின.
கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆவணத் தொடர் ‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’. இந்தத் தொடரை இயக்கியவர் தான் இயக்குநர் செல்வமணி செல்வராஜ். இப்போது ‘காந்தா’ படத்தை அவர் இயக்குகிறார். தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.