அஜர்பைஜானில் வசிக்கும் அர்ஜுனை (அஜித் குமார்) பிரிய நினைக்கும் அவர் மனைவி கயல் (த்ரிஷா), மற்றொரு நகரத்தில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல நினைக்கிறார். கடைசிப் பயணமாக, தானே காரில் கொண்டு சென்று விடுகிறேன் என்கிறார் அர்ஜுன். இருவரும் செல்கிறார்கள். வழியில் இருக்கும் பெட்ரோல் பங்கில்தமிழர்களான ரக்ஷித்தையும் (அர்ஜுன் சர்ஜா), தீபிகாவையும் (ரெஜினா கசாண்ட்ரா) சந்திக்கிறார் கயல். இதற்கிடையில் அர்ஜுனின் கார் பிரச்சினை செய்ய, ரக்ஷித், தீபிகா வரும் டிரெக்கில் கயலை அனுப்பி, 40 கி.மீ தொலைவில் இருக்கும் தாபாவில் இறக்கி விடச் சொல்கிறார், அர்ஜுன். பிறகு கார் சரியாகி, அந்த தாபாவுக்கு அவர் வந்தால், கயல் கடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. கயலைக் கடத்தியவர்கள் யார், அவரை அர்ஜுன் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பது படம்.
‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படப் பாதிப்பில் உருவாகியிருக்கும் கதைதான். காணாமல் போன மனைவியைத் தேடும் கணவன் என்கிற ஒன் லைனுக்குள் பெரிய குற்றச் சம்பவத்தை வெளிப்படுத்தும் ஆக்ஷன் த்ரில்லர் கதை என்றாலும் அதிரடியான மசாலாக்களையும் அஜித்குமாரின் நட்சத்திர அந்தஸ்தையும் ஓரங்கட்டி வைத்திருக்கிறது படம்.
தமிழ் சினிமா வரையறுத்திருக்கிற மாஸ் ஹீரோ அறிமுக பில்டப் காட்சிகளில் இருந்து விலகித் தொடங்கும் ஆரம்ப காட்சியிலேயே, இது வழக்கமான அஜித்குமார் படம் இல்லை என்பதைப் புரிய வைத்து விடுகிறார், இயக்குநர் மகிழ் திருமேனி. காரில் மனைவியுடன் செல்லும்போது தகராறு செய்யும் ஆரவ் கோஷ்டியை பெட்ரோல் பங்கில் மீண்டும் சந்திக்கும்போது, ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதிரடி ஆக்ஷனுக்கான அத்தனை சாத்தியங்கள் இருந்தாலும் அஜித், ‘நான் சண்டைய விரும்பலை’ என்று சொல்கிற இடம், தமிழ் சினிமாவின் இலக்கணம் மீறிய அருமை.
அர்ஜுன், கயல் உலகத்தின் காதல், திருமணம், முறிவு போன்ற காட்சிகள் ‘மான்டேஜ்’குள் முடிந்துவிடுவதும் ரக்ஷித், தீபிகாவின் அழகான வருகைக்குப் பிறகு கதையில் ஏறும் எதிர்பார்ப்பும் நனைந்த திரியில் பற்றிய தீ போல மெதுவாக நகர்ந்தாலும் முதல் பாதி ரசிக்க வைக்கிறது. அர்ஜுன் – கயலுக்கான கதாபாத்திரங்களை அழகாக எழுதியிருக்கிறார்கள். ஆனால் பிரிவுக்கான காரணம் பார்வையாளனுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே போல ரக்ஷித், தீபிகா கதாபாத்திரங்களை அழகாக வடிவமைத்தாலும் அவர்களின் மனநோய் பின்னணி தேவையற்றத் திணிப்பு.
அர்ஜுன் கதாபாத்திரத்தில் அஜித்குமார் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லன் கோஷ்டிகளிடம் சளைக்காமல் அனைத்து அடிகளையும் வாங்கிக் கொள்வது ஆச்சரியம். ஒரு மாஸ் ஹீரோ இப்படிஇறங்கி வந்து கதைக்குள் அடங்குவது, ஆரோக்கியமானது. அஜித்தின் மனைவி கயலாக வரும் த்ரிஷாவுக்கு அதிக வேலையில்லை. நெகட்டிவ் கேரக்டரில் அர்ஜுன் சார்ஜா, ஆக்ஷன் கிங் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் போடும் ஆக்ஷன் மட்டும் தனித்துத் தெரிகிறது. ரெஜினாவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரவ், அஜர்பைஜான் நடிகர்கள் என அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
கதை நடக்கும் அஜர்பைஜானின் நீண்ட சாலைகளின் ‘லேண்ட்ஸ்கேப்’, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரமிக்க வைக்கிறது. அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கதைக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. காருக்குள் நடக்கும் ஆக்ஷன் காட்சியில் ஸ்டன்ட் இயக்குநரின் உழைப்பு மிரட்டல். காந்தின் படத்தொகுப்பும் கச்சிதம்.
மிகைப்படுத்தப் படாத காட்சிகள் படத்துக்குப் பலம் என்றாலும் தன்னை விரும்பாத மனைவிக்காக அர்ஜுன் கதாபாத்திரம் ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்? என்று எழுகிற கேள்வி, அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாகக் கணிக்க முடிவது என்கிற சில குறைகளை சரி செய்திருந்தால், இன்னும் த்ரில் அனுபவத்தை இந்தப் படம் தந்திருக்கும். ஆக்ஷன் அதிரடி ஆர்வத்துடன் வரும் அஜித் ரசிகர்களுக்கு இது, மிலிட்டரி ஓட்டலில் வெண் பொங்கல்!