நேர்மைக்குப் பெயர்பெற்ற சார்பதிவாளர் தசரத ராமன் (சமுத்திரக்கனி). தந்தையின் குணத்துக்கு நேர்மாறாக தீயவனாக வளருகிறான் மகன் ராகவன் (தன்ராஜ்). இதனால் தந்தை- மகன் உறவு முட்டல் மோதலாகவே தொடர்கிறது. ஒரு கட்டத்தில் கைமீறிப்போகும் மகனின் விருப்பத்தை அறிந்து அதை நிறைவேற்றத் தயாராகிறார் அப்பா. அது என்ன? மகன் மாறினானா, இல்லையா என்பது கதை.
குழந்தை வளர்ப்பில் எங்கோ ஓரிடத்தில் நேரும் சிக்கல், பிள்ளைகளை எந்த எல்லைக்கும் இழுத்துக்கொண்டுபோகும் என்பதற்கு ராகவன் கதாபாத்திரம் எடுத்துக்காட்டு. அதேபோல், பிள்ளைகள் நலனுக்காக உயிரைக்கூட இழக்கத் துணியலாம் என்கிற பாசத்துக்கு எடுத்துக்காட்டு, ராமன். இந்த முரண்பாடான கலவையில், வழிதவறிப் போன மகனை மீட்பதற்கான சாமானிய தந்தையின் போராட்டமாக விரியும் திரைக்கதையில் நிறைந்துள்ள வலுவான காட்சிகள் ஆரம்பம் முதலே நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
‘தரமான விதை, நல்ல நிலம்; ஆனால் விளைச்சல் மட்டும் எப்படிப் பதரானது?’ என மகனை எண்ணிக் கலங்கும் தந்தையாக, இயல்பான, அளவான நடிப்பால்கலங்க வைக்கும் சமுத்திரக்கனி, இதுவரை ஏற்ற அப்பா கதாபாத்திரங்களில் இது முற்றிலும் மாறுபட்டது. மகனை மீட்பதற்காக அப்பா எடுக்கும் இறுதி முயற்சி உருவாக்கும் பதற்றம், படத்தின் இரண்டாம் பாதியை விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திச் செல்கிறது. அப்பாவுக்கு மட்டும்தான் வலிகளும் ரணங்களுமா? கணவனுக்கும் மகனுக்கும் இடையில் அல்லாடும் ஓர் அம்மாவின் வேதனை அதைவிடக் கொடுமையானது என்பதை நமக்கு கடத்துகிறார் பிரமோதினி.
இந்த 3 கதாபாத்திரங்களுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் ஹரீஷ் உத்தமன் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் அசரடித்திருக்கிறார். திரைக்கதையின் சரியான இடத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சியில் மிரட்டியிருக்கிறார். ஒரு மனிதனின் தேவையும் அதை மீறிய அவனது பேராசை எந்த எல்லைக்கு அவனைத் துரத்திக்கொண்டுபோகும் என்பதை தேவா கதாபாத்திரம் மூலம் எடுத்துக்காட்டும் தன்ராஜின் இயக்கம், ஒரே சீராகவும் திரைக்கதையின் ஓட்டத்துடன் இணைந்து செல்லும் நேர்த்தியோடும் படம் முழுவதும் வெளிப்பட்டுள்ளது.
படத்தை இயக்கி, மகன் ராகவனாக நடித்து பார்வையாளர்களின் கோபத்தையும் சம்பாதித்துக்கொள்கிறார் தன்ராஜ். இயக்குநர் கோட்டைவிட்ட ஒரே இடம் நாயகி (மோக்ஷா) கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறியது. அதேபோல், சுனிலை சிறிய கதாபாத்திரத்தில் பயன்படுத்தியது அவ்வளவாக எடுபடவில்லை. ஆனால், சத்யாவும், பாலிரெட்டி பிருத்திவிராஜும் சரியான இடங்களில் தரமான காமெடியால் ரிலீஃப் கொடுத்துவிடுகிறார்கள்.
அப்பாவைக் கொண்டாடுபவர்கள், கொண்டாடத் தவறியவர்கள் என அனைவரையும் உணர்வு மேலிட அசைத்துப் பார்க்கும் இந்த தந்தையின் கதை.