ஊரார் வியக்கவும் பெற்றோர், உறவினர்கள் மகிழவும் தனது திருமணத்தைப் புதுக்கோட்டை அருகேயுள்ள சொந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார், சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்). அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா (நிஹாரிகா), திருமணத்துக்காக, முதல்நாளே புதுக்கோட்டை வந்து சேர்கிறார். விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவரைக் காண, செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் செல்கிறார் சத்யா. வழியில் நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை மோதிவிடுகிறார். அந்த ஊர் மக்கள் சத்யாவைப் பிடித்துக் கொள்கிறார்கள். பிறகு அவரின் திருமணம் நடந்ததா? கல்யாணிக்கும் வயிற்றிலிருக்கும் அவரது குழந்தைக்கும் என்னவானது என்பதை நோக்கிக் கதை நகர்கிறது.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகத் திருமண வீட்டிலிருந்து தொடங்கும் முதல்பாதிப் படம், விபத்துக்குப் பின் நடக்கும் சங்கிலித் தொடர் திருப்பங்களால் முடிந்ததே தெரிய வில்லை. நாயகனின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு, அவனுடைய உறவுகள், நண்பர்களை நிம்மதி இழக்கச் செய்த கதையின் முக்கியச் சம்பவத்தில், உண்மையாகவே என்ன நடந்தது என்பதை விவரிக்கும் இரண்டாம் பாதியில் முடிச்சு அவிழும் தருணங்கள், பல படங்களில் பார்த்த பழைய அவியல். என்றாலும் நாயகனுக்கும் வில்லனுக்குமான மோதலும் விலகலும் முன்னிறுத்தும் உணர்வு பாராட்டும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
கதையின் முக்கியச் சம்பவம் நிகழத் தூண்டுகோலாக இருப்பது நாயகி கதாபாத்திரம். ஆனால், இரண்டாம் பாதியில் நாயகிக்கு எந்தப் பங்கும் இல்லாமல் இயக்குநர் முற்றாகத் துடைத்துப் போட்டது விறுவிறுப்பாக நகர்ந்த திரைக்கதையில் வலிந்து தோண்டப்பட்ட பள்ளம். நாயகனாக நடித்துள்ள ஷேன் நிகம், மலையாள வாசனை வீசும் தமிழ் பேசினாலும் நடிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறார். துரை சிங்கமாக வரும் கலையரசன், தனது கதாபாத்திரத்தின் சிக்கலை உணர்ந்து நடித்திருக்கிறார். அவர் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, ஆக்ஷன் பிளாக்குகளில் மல்லுக்கு நிற்பவராக முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது எடுபடவில்லை.
மீராவாக வரும் நிஹாரிகா நடிப்பிலும் நடனத்திலும் கவர்கிறார். ஐஸ்வர்யா தத்தா திறமையைக் காட்ட இறுதிக்கட்டக் காட்சி கைகொடுக்கிறது. கருணாஸ், கீதா கைலாசம் கவனிக்க வைக்கிறார்கள். புதுக்கோட்டை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைத் தனது ஒளிப்பதிவில் அழகாகப் பதிவு செய்து கதைக் களத்தை உணர வைக்கிறார், பிரசன்னா எஸ்.குமார். பின்னணி இசை மற்றும் பாடல்களில் கவனம் ஈர்க்கிறார், சாம் சி.எஸ்.படத்தொகுப்பாளர் வசந்த குமார், 2 வருடத்துக்கான ‘டைம் லேப்ஸை’ உணர வைப்பதில் கோட்டை விட்டதுடன் இரண்டாம் பாதியின் தேவையற்ற துருத்தல்களை வெட்டிச் சரி செய்யத் தவறியிருக்கிறார்.
அழுத்தமான முக்கிய சம்பவத்தைக் கொண்ட கதையில் இரண்டாம் பாதியில் மலிந்திருக்கும் நீட்டல்களையும் கூறியது கூறலையும் தவிர்த்திருந்தால் ‘மெட்ராஸ்காரன்’ இன்னும் அழகாக இருந்திருப்பான்.