வீடுகளுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்யும் ராதா மணி (குரு சோமசுந்தரம்), மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மது பழக்கம் கொண்ட ராதா மணி, ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகிறார். அவரை மீட்க அசோகன் (ஜான் விஜய்) நடத்தும் குடி மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார் அஞ்சலம். அங்கிருக்க முடியாமல் தவிக்கும் ராதா மணி, நண்பர்கள் சிலருடன் தப்பிக்கிறார். பிறகு அவருக்கு என்ன நேர்கிறது? குடியில் இருந்து மீண்டாரா? மனைவி குழந்தைகளோடு சேர்ந்தாரா, இல்லையா? என்பது கதை.
மதுவால் குடும்பங்கள் படும் அவமானத்தையும் அவஸ்தையையும் உணர்த்தும் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் அதே களத்தில் வந்திருக்கும் பாட்டல் ராதா, தனியானதுதான். இந்தப் படம் பேசும் அதே குடிநோயாளிகள் பற்றியும் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் என்ற குடிநோயாளிகள் மறுவாழ்வு மையம் பற்றியும் ஏற்கெனவே ‘அப்பா வேணாம்ப்பா’ என்ற படம் வந்திருந்தாலும் குடி கொடுமையைப் பற்றி அழுத்தமாகவே பேசுகிறது, இப்படம்.
குடி, கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆதிக்கத்துக்குள் மனிதனை இழுத்துக் கொள்ளும் இயல்பை, அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். குடிக்கவே கூடாது என்று நினைத்துக்கொண்டே அதற்குள் முங்கும் குடிநோயாளியின் இயல்பு, குடியில் இருந்து விடுபடுவான் என ஒவ்வொரு முறையும் நம்பி ஏமாறும் காதல் மனைவி, குழந்தைகளுடன் படும்பாடு, சமூகம் அவர்களை எதிர்கொள்ளும் விதம், குடி மறுவாழ்வு மையத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள் என அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் அமைத்திருக்கும் காட்சிகள், யதார்த்தம் மீறாமல் நகர்வது அழகு.
அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கதாபாத்திரங்கள்தான் படத்தின் முதுகெலும்பு. அப்பாவியாக, ஆக்ரோஷமாக, தன்னை நினைத்தே நொந்துகொள்ளும் குடிநோயாளியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், குரு சோமசுந்தரம். குடிகாரனின் தடுமாற்றத்தில் இருந்து முகமாற்றம் வரை அவரது தோற்றம் அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே நம்ப வைக்கிறது.
கணவன் திருந்திவிடுவான் என நம்பிக்கையோடு இருந்து ஏமாறும் காதல் மனைவியாக சஞ்சனா நடராஜன் பரிதாபம் அள்ளுகிறார். தாலியை விற்றுகுடும்பம் நடத்தும் அவர், “நீ குடிகாரன் அப்படிங்கறதால தெருக்காரன் எல்லாம், ஏன் உன் மாமன் கூட எங்கிட்ட தப்பா நடக்க முயற்சிக் கிறான்” என கூறும் இடத்தில் கலங்க வைத்துவிடுகிறார். அசலான குடிகாரனின் மனைவியாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது அதிகப்படியானதல்ல.
வழக்கமாக முரட்டு கதாபாத்திரங்களில் பார்த்து பழகிவிட்ட ஜான் விஜய், இதில் வேறு மாதிரி நடிப்பில்கவனிக்க வைக்கிறார். அவருக்கான ‘பேக் ஸ்டோரி’யும் கலங்க வைக்கிறது. குடி மறுவாழ்வுமையத்தில் இருக்கும் மாறன், படத்தின் சீரியஸ்தன்மையை குறைத்து கலகலப்பை ஏற்படுத்துகிறார். குடிகார நண்பன் பாரி இளவழகன், மேஸ்திரி ஆண்டனி என துணைக் கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன. வசனங்களும் ரசிக்க வைக்கின்றன.
ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு படத்தின் தொடக்க காட்சியிலேயே ஈர்க்கிறது. ஷான் ரோல்டனின் சில பாடல்களும் பின்னணி இசையும் கதைக்குள் இழுத்துச் செல்கின்றன.
குடிகார குடும்பத் தலைவனால் ஒரு குடும்பம் படும் கொடுமை என்ன என்பது தெரிந்ததுதான் என்பதால் அடுத்தடுத்து வரும் காட்சிகளை எளிதாக யூகித்துவிட முடிவது படத்தின் மைனஸ். இரண்டாம் பாதியில், காட்சிகள் ‘டாக்குமென்டரி’ தன்மைக்குவந்துவிடுவதும் படத்தின் நீளமும் சோதித்து விடுகின்றன. படத் தொகுப்பாளர் சங்கத்தமிழன் கருணையின்றி கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதையும் தாண்டி இன்றைய சமூகத்துக்குத் தேவையான படம் என்பதால், பாட்டல் ராதாவுக்கு கொடுக்கலாம் வரவேற்பு.