நண்பர்களுடன் காரில் சென்றுகொண்டிருக்கும் அர்ஜுனுக்கு (ஆகாஷ் முரளி), தனது முன்னாள் காதலி தியா (அதிதி ஷங்கர்), கொலைக் குற்றத்துக்காக போர்ச்சுக்கல் நாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ‘பிரேக் அப்’ ஆனாலும் முன்னாள் காதலிக்காக உடனடியாக அங்கு செல்கிறார், அவருக்கு உதவுவதற்காக. இதற்கிடையே இருவரின் காதலும் மோதலும் பிளாஷ்பேக் காட்சிகளாக வந்து செல்கின்றன. தியா அந்த குற்றத்தைச் செய்தாரா? அவருக்கு என்ன ஆனது? அவரை அர்ஜுனால் காப்பாற்ற முடிந்ததா என்பதைச் சொல்கிறது மீதி கதை.
அழகான ரொமான்டிக் கதையின் பின்னணியில் த்ரில்லர் இணைத்துக் கொடுப்பதும் அதன் மூலம் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களைப் பரபரக்க வைக்க வேண்டும் என்கிற, இயக்குநர் விஷ்ணுவரதனின் ஐடியாவும் சுவாரஸ்யமானது. புதிய கதை இல்லை என்றாலும் நாயகன்- நாயகிக்கான காதல் ஏரியா ஒரு டிராக்கிலும் மற்றொரு டிராக்கில் த்ரில்லர் மூடிலும் மாறி மாறி செல்லும் காட்சிகள், தொடக்கத்தில் எதிர்பார்க்க வைக்கின்றன.
போர்ச்சுக்கல்லில் நடக்கும் விசாரணை, தொழிலதிபருக்கான ஈகோ, தன் பாலின ஈர்ப்பாளர்கள், நாயகனுக்கு உதவும் லோக்கல் தாதா, சிறைக்குள் கொலை வெறியோடு இருக்கும் சகப் பெண் கைதி என கதை எங்கெங்கோ சுற்றிச் சுழல்கிறது. ஆனால் எதுவும் அழுத்தமின்றி, பார்வையாளர்களோடு ஒன்றாமல் ‘யாருக்கோ, என்னவோ நடந்தால் நமக்கென்ன?’ என்பது போலவே நகர்வது சோகம். காதலுக்காகக் குழந்தைகளுடன் பள்ளிவேனை கடத்தி, நாயகன் மிரட்டுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயம் சாரே!
ஆகாஷ் முரளி, அறிமுகம் என்பது போல் இல்லாமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் உயரமும் இயல்பான தோற்றமும் ஆவேசம் கொண்ட காதலன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. எமோஷன் காட்சிகளில் இன்னும் ‘நடிக்க’ வேண்டும். அதிதி ஷங்கர் மாடர்ன் தோழி கதாபாத்திரத்துக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். போர்ச்சுக்கல் வழக்கறிஞராக கல்கி கோச்சலின் சரியான தேர்வு. தொழிலதிபர் ஆதி நாராயணனாக சரத்குமார், அவர் மனைவி வசுந்தராவாக குஷ்பு, வரதராஜனாக ராஜா, போலீஸ் அதிகாரியாக பிரபு என துணை கதாபாத்திரங்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
படத்தின் ஒட்டு மொத்த ஆறுதல், கேமரூன் எரிக் பிரைசனின் அழகான ஒளிப்பதிவு. போர்ச்சுக்கலின் அழகை இனிமையாகவும் ரசனையாகவும் காண்பிக்கிறது அவரது கேமரா. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பின்னணி இசை, படத்துக்கு கை கொடுக்கிறது. படத் தொகுப்பாளர் கர் பிரசாத், தன்னால் முடிந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார். படம் டெக்னிக்கலாக நன்றாக இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதுமா?