கடற்படை மாலுமிக்கான பயிற்சி முடித்த நிலையில் பணியில் இணையாமல் வீடு திரும்பியவன் ஜேசன் (ரங்கா). தன்னுடைய அப்பாவும் தாய்மாமா டோனியும் (இளங்கோ குமணன்) நடத்தி வரும் பாரு டன் கூடிய உணவு விடுதியை மாமாவுடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறான். ஆனால், எதிர்பாராத சூழ்நிலையில், தங்கள் உணவகத்தை ருத்ரா என்கிற ‘செக்யூரிட்டி’ நிறுவனம் நடத்தும் மர்மமான மனிதருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு அதை மீட்க முடியாமல் தவிக்கிறார்கள். எதனால் அவர்கள் உணவகத்தை இழந்தார்கள்? ருத்ரா உண்மையாக செக்யூரிட்டி நிறுவனம்தான் நடத்துகிறாரா? ஜேசனால் தனது குடும்ப உணவகத்தை மீட்க முடிந்ததா, இல்லையா என்பது கதை.
மாநகரத்தைக் கதைக்களமாகக் கொள்ளும் குடும்ப ஆக்ஷன் டிராமா கதைகள். பெரும்பாலும் தாதாயிசம், உள்ளூர் அரசியலின் அழுத்தம், குழு மோதல் என பார்த்துப் பழகிய கதாபாத்திரங்களையும் நீர்த்துப் போன சம்பவங்களையும் கொண்டிருக்கும். அதிலிருந்து விலகி, இப்படத்தின் இயக்குநர் ரங்கா தேர்ந்து கொண்டிருக்கும் பூர்வீக இடத்தை மீட்பது என்கிற மைய பிரச்சினையை உணர்வு குன்றாமல் கையாண்டிருக்கிறார். இந்தப் பிரச்சினையைச் சுற்றி எழுதப்பட்ட நிழலுலகக் கதாபாத்திரங்கள், அவர்களைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் அழுத்தமாகவும் புதிதாகவும் இருக்கின்றன. ‘நான்- லீனியர்’ திரைக்கதை, கதாபாத்திரங்களின் முன்கதைகளை மெல்ல மெல்ல விடுவித்துக்கொண்டே வருவது திரை அனுபவத்துக்குத் தடங்கலற்ற தொடர்ச்சியைக் கொடுத்துவிடுகிறது.
கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்தது ஈர்ப்பான அம்சம். வில்லன்களாகச் சித்தரிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல குணங்களையும் கொண்டிருப்பதை ருத்ரா கதாபாத்திரத்தின் வழியாகச் சொன்ன விதம் நச்! அக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிதின் மேத்தா, தோற்றம், உயரம், அலட்டல் இல்லாத நடிப்பு ஆகியவற்றால் ஈர்த்துக்கொள்கிறார். இவரைப் போலவே ஜேசனின் தாய் மாமாவாக வரும் இளங்கோ குமணன் கதாபாத்திரத்தின் பரிமாணமும் அதற்கு அவர் கொடுத்திருக்கும் நுணுக்கமான நடிப்பும் தரம். இந்த இருவருக்கு அடுத்த இடத்தில் இதை எழுதி, இயக்கி, ஜேசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரங்காவை வரவேற்கலாம்.
கதை நிகழும் சென்னை மாநகரை அழகாகவும் மர்மமாகவும் காட்டுவதில் ஒளிப்பதிவாளர் சரத்குமார். எம், தனது முத்திரையை உயிர்ப்பாகப் பதித்திருக்கிறார். கதையை. கதாபாத்திரங்களின் வளர்ச்சியை எந்த இடத்திலும் வெட்டக் கூடாது என்கிற படத்தொகுப்பாளர் இளங்கோவின் எச்சரிக்கை உணர்வு, முதல் பாதி படத்தில் தொய்வைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அதை இரண்டாம் பாதியை போல் வேகம் கூட்டிச் சரி செய்திருந்தால் ‘தென் சென்னை’ விறுவிறுப்பான குடும்ப த்ரில்லர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.