தமிழக – கேரள எல்லையான குமுளியில் லாட்டரி சீட்டுக் கடை நடத்துகிறார் மாணிக்கம் (சமுத்திரக்கனி). அவரிடம் லாட்டரி சீட்டு வாங்குகிறார் ஊர், பெயர் தெரியாத முதியவர் (பாரதிராஜா). பணத்தைத் தொலைத்துவிட்ட அவர், பணத்தைக் கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக்கொள்வதாகச் சொல்லிச் செல்கிறார். அவரது பயணச் செலவுக்கும் மாணிக்கமே பணம் கொடுத்து அனுப்ப, அடுத்த நாள், பெரியவர் பணம் கொடுக்காத லாட்டரி சீட்டுக்கு ரூ.1.5 கோடி பரிசு விழுகிறது. இப்போது மாணிக்கம் எடுக்கும் முடிவும் அதை செயல்படுத்த அவர் படும் பாடுகளுமே கதை.
கடந்த ஜூலையில் வெளியான ‘பம்பர்’ படத்தின் அதே ஒரு வரிக்கதை. ஆனால், திரைக்கதை, உரையாடல், படமாக்கம் ஆகிய அம்சங்களில் உற்சாகமான திரைமொழியைக் கையாண்டு, பல இடங்களில் பதற்றப்படவும் பல இடங்களில் நெகிழவும் வைத்துவிடுகிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. மாணிக்கம் தனது லாட்டரி சீட்டுக் கடையில் தமிழ் நூல்களையும் விற்பனை செய்வது, அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிவிடுகிறது திரைக்கதை.
மாணிக்கத்தின் மனைவி சுமதியும், அவரது குடும்பத்தினரும் பரிசு விழுந்த லாட்டரி சீட்டைக் கைப்பற்ற எய்யும் அஸ்திரங்கள் ஒவ்வொன்றும் அப்ளாஸ் ரகம். ‘நாடோடிகள்’ அனன்யா, இதில் சுமதியாக வந்து அசரடிக்கிறார். கணவனின் கடந்த காலத்தை அறிந்தபின்பு அமைதியாகும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பில் ஒளிர்கிறார்.
காவல்துறை அதிகாரியிடம் சுமதி ரூ.4 லட்சம் கடன் வாங்கிய பின்னணிக் காரணத்தை வெளிப்படுத்தத் தவறியது, திரைக்கதையின் வெகுசில ஓட்டைகளில் ஒன்று. ஆனால், குடும்ப உறுப்பினர்களின் நியாயமான சுயநலஅழுத்தத்தில் சிக்கி மூச்சுத் திணறும் மாணிக்கம், ஒரு நொடி இடறிவிடுவாரோ என்று பதறும் நேரத்தில், ‘உழைச்ச காசு ஒட்டினா போதும்’ என பெட்டிக்கடைக்காரர் மூலம் தெளிவு பெற்று ஓடும் ஓட்டத்தை தொடர்வது நல்ல திருப்பம். அதைப் போன்றே, ரூ.2 லட்சம் கேட்கும் சைபர் பிரிவு போலீஸார் எடுத்த முடிவை இறுதியில் வெளிப் படுத்தும் காட்சி, ‘மாணிக்க’ங்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் என்பதை ஜிலீரென உணர்த்துகிறது.
கதையின் உயிர்நாடியாக இருக்கும் அறம், அதன் மையமாக இருக்கும் நேர்மையின் மொத்த உருவமாக அமைந்துவிட்ட கனமான கதாபாத்திரத்தை இயல்பான நடிப்பால் தூக்கிச் சுமந்திருக்கிறார் சமுத்திரக்கனி. பாரதிராஜாவின் முதுமையே அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு அணி சேர்க்கிறது என்றால், முதுமையை சட்டை செய்யாத அவரது நடிப்பு விருதை கொண்டு வந்து சேர்க்கலாம்.
பசுமையும் ஈரமும் பல்லுயிர்களும் பெருகிக்கிடக்கும் கதை நிகழும் களத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. விஷால் சந்திரசேகரின் இசை, கதையோட்டத்தின் விரல் பிடித்து நடக்கிறது.
‘மத்தவங்களுக்காக நாம விடுற கண்ணீர் தான் நேர்மை’ என்று மாணிக்கம் சொல்லும் காட்சி, நேர்மையைக் கிண்டல் செய்கிறவர்கள் மனதிலும் அதன் மீதான நம்பிக்கையை ஆழமாக விதைக்கும் இப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படைப்பு.