தனது பதவிக்காலம் முடிய ஓராண்டு உள்ள நிலையில், நல்லாட்சி வழங்க முயல்கிறார், முதல்வர் பொப்பிலி சத்தியமூர்த்தி (ஸ்ரீகாந்த்). ஆனால், பணம், பதவி வெறிப் பிடித்த அவருடைய மகன் மோபிதேவி (எஸ்.ஜே.சூர்யா), முதல்வரைக் கொன்று அப்பதவியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். ஆனால், முதல்வர் இறக்கும் முன்பே, ஐஏஎஸ் அதிகாரியான ராம் நந்தனை (ராம் சரண்) முதல்வராகவும் அரசியல் வாரிசாகவும் அறிவித்துவிடுகிறார். இதற்கு மோபிதேவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிறகு இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது?, சத்தியமூர்த்தி ஏன் ராமை முதல்வராக அறிவித்தார்? அவர்களுக்கு என்ன தொடர்பு என்பது ‘கேம் சேஞ்சர்’ கதை.
தமிழில் ‘ஜென்டில்மேன்’, ‘முதல்வன்’ என அரசியல் படங்களை இயக்கியிருந்த ஷங்கர், தெலுங்குக்காக உருவாக்கி இருக்கும் அரசியல் படம் இது என்பதால் மசாலாவின் காரம் தூக்கலாக இருக்கிறது. பார்த்துப் பழகிய துரோகம், வஞ்சகம், அரசியல் சதுரங்கப் போட்டியைச் சுற்றிதான் திரைக்கதை பின்னப்பட்டிருக்கிறது.
ஐபிஎஸ் அதிகாரி, ஐஏஎஸ், மாணவன் என ரோலர் கோஸ்டர் வேகத்தில் செல்கின்றன முதல் பாதிக் காட்சிகள். படத்தின் கதை என்ன என்பதே இடைவேளையில்தான் தெரிய வருகிறது. அந்த அளவுக்கு முதல் பாதியை நாயக பிம்பத்துக்கு முன்னுரிமை கொடுத்து நகர்த்தியிருக்கிறார் ஷங்கர். இயற்கையை அழிக்கும் கார்ப்பரேட்டுகள் அரசியல்வாதிகளை எப்படி வளைக்கிறார்கள் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இரண்டாம் பாதியில்தான் சூடுபிடிக்கிறது, திரைக்கதை. ராம் சரணுக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையேயான ‘டாம் அண்ட் ஜெர்ரி’ மோதல் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனாலும் ஷங்கர் படத்துக்கான ஸ்பீடு கொஞ்சம் மிஸ்ஸிங். ஒரு கிராமத்திலிருந்து உருவாகும் தலைவர், அவருடைய குரலாக ஒலிக்கும் விசுவாசி தலைவராவது போன்ற காட்சிகளில் பெரிதாக ஒட்ட முடியவில்லை.
என்னதான் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் அமைச்சரை ‘லெப்ட் ஹேண்டில்’ டீல் செய்வது, பொது இடத்தில் அறைவது போன்ற காட்சிகள் அதீத கற்பனை.
தலைமைத் தேர்தல் அதிகாரி சண்டை போடுவது, தேர்தலை நடத்த விடாமல் முதல்வர், கண்ணாமூச்சிக் காட்டுவது எனப் படம் நெடுகிலும் பூச்சுற்றல்கள்.
நாயகன் ராம் சரண் தன் கதாபாத்திரத்துக்கு அத்தனை நியாயம் சேர்த்திருக்கிறார். ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரி, தேர்தல் அதிகாரி, தப்பைப் பொறுக்க முடியாத மாணவன் என விதவிதமான கெட்டப்புகளில் வருகிறார். கிராமத்துத் தலைவராக வரும் இடத்தில் நிதானமான நடிப்பை வழங்கியிருக்கிறார். நாயகியாக கியாரா அத்வானி கொடுத்த கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். முதல்வராக காந்த் அளவாக நடித்திருக்கிறார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா தன் பாணியில் முத்திரையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜெயராம் அவ்வப்போது வந்து சிரிப்பு மூட்டுகிறார். சுனிலும் தன் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார். அஞ்சலி இரு மாறுபட்ட வேடங்களில் வருகிறார். சமுத்திரக்கனி, பிரம்மானந்தம், அச்யுத்குமார் உள்பட ஏராளமான நடிகர் பட்டாளம் இருக்கிறது.
தமன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையை குறையில்லாமல் செய்திருக்கிறார். திரு ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன. வழக்கமான காட்சிகளையும் இரண்டாம் பாதியின் நீளத்தையும் குறைத்திருந்தால் இந்த கேம் சேஞ்சரை இன்னும் ரசிக்கலாம்.